உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லறம் :

பாண்டிநாட்டுப் புலவர்கள்-1

29

பைந்தமிழ்ப் பரிதியார்க்குப் பத்தொன்பதாம் வயதில் திருமணம் நிகழ்ந்தது. திண்டுக்கல் பா. கலியாண சுந்தர ஐயர் என்பவரின் திருமகளார் முத்து சுபலக்குமி என்பவரை வாழ்க்கைத் துணையராகக் கொண்டார். இனிய பண்புகள் எல்லாம் ஓர் உருவானவர் இவ் அம்மையார். இவர்கள் இல்வாழ்வின் பயனாக ஆனந்தவல்லி, நடராசன், சுவாமிநாதன் என்னும் நன்மக்கள் மூவர் தோன்றினர்.

இறுதிநாள்:

பரிதியார் இனிய இல்லறம் பதினான்கு ஆண்டுகள் சிறப்பாக நடைபெற்றது. பரிதியாரின் அளவு கடந்த உழைப்பு உடலைத் தாக்கத் தொடங்கியது. அன்றியும் பரிதியார் கொண்டிருந்த நாடகப் பற்றால், பெரும்பாலும் இரவெல்லாம் கண் விழித்துக் கொண்டிருந்து நாடகம் பார்ப்பதும் சேர்ந்து கொண்டு உடலை வாட்டுவதாயிற்று. பனியே வாடையே என்று கருதாமல் திறந்த வெளியில் இருந்தும் இரவெல்லாம் எழுத்துப் பணி செய்தது உடல்நலம் கெட விரைந்து தூண்டிற்று. இவற்றால் பரிதியார் உடல் இளைத்தது! இருமல் வாட்டியது! கல்லூரிக்குச் செல்லவிடாமல் கட்டிலில் கிடக்க வைத்தது. ஆயினும் கன்னித்தமிழ் கற்பிப்பதை அவர்தம் கனிவாய் மறக்கவில்லை. தமிழ் நூல்கள் இயற்றுதலை அவர்தம் தவக் கை ஓயவில்லை. நாள் செல்லச் செல்ல வண்டமிழ் வாழ்வே வாழ்வாகக் கொண்ட பரிதியாரின் வாயும் ஒடுங்கிப் போயிற்று! நூற்றாண்டு காலம் வாழ்ந்தாரும் செய்ய முடியாத தொண்டுகளை முப்பத்திரண்டு வயது அளவிலேயே முடித்த பரிதியின் பருவுடல் அதற்குமேல் தாங்கவில்லை! அந்தோ! தமிழகத்தின் தவக்குறையான நாட்களில் ஒன்றாயிற்று 1903 நவம்பர் இரண்டாம் நாள்! பரிதியார் ஒளி உருக் கொண்டார்! தமிழ் உள்ளங்கள் களி இழந்தன!

"என் புருவம் சுருக்கம் ஏறிக் கண்களை மறைக்கும் முதுமையிலும் வாழ்கின்றேன்; நடுவயதும் வருமுன்னரே நற்றமிழ்ப்பரிதி அகன்றானே" என்று கூறிக் கண்ணீர் வடித்துக் கலங்கி நின்றார் மில்லர் துரைமகனார் என்றால் கட்டிளம் மனைவியர், கைக் குழந்தையர் கற்றறிந்த மாணவர், அன்பர் கவலையை உரைக்கச் சொல்லும் உண்டோ?