உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. நாவலர் பாரதியார்

அக்

திருநெல்வேலியில் ஒரு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்குத் தலைமை தாங்கியிருந்தவர் ஈழ நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் புலவர் ஆவர். அவர் கூட்டம் முடிந்ததும் அங்கிருந்த அறிஞர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு பாடலின் இறுதியடியைத் தந்து மற்றை அடிகளை அமைத்துப் பாடித் தருமாறு கேட்டார். புலவர்கள் பாட்டியற்றத் தொடங்கினர்.

அக் கூட்டத்திற்குச் ‘சோமு' என்றும், 'சுப்பு' என்றும் பெயருடைய இளைஞர் இருவரும் வந்திருந்தனர். அவர்களுள் சோமுவைப் பார்த்துச் சுப்பு, "அடே சோமு, நீ ஒரு பாட்டுப் பாடு; நானும் ஒரு பாட்டுப் பாடுகிறேன்; நாம் இவர்கள் பாடித் தருவதற்கு முன்னே, நம் பாட்டைத் தந்துவிடுவோம்" என்று கூறினான். அவ்வாறே இருவரும் பாட்டுப் பாடிக் கொண்டு ஈழத்துப் புலவரிடம் தந்தனர்.

பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் இவ்வளவு விரைவில் பாட்டை எழுதிக் கொண்டு வந்துவிட்டார்களே எனப் புலவர் வியந்தார். பெரியவர்கள் அதற்குப் பின்னர்த் தாம் பாடிய பாடல்களைக் கொண்டு வந்தனர்.புலவர், எல்லாப் பாடல்களையும் ஆராய்ந்தார். அவற்றுள் சுப்பு பாடல் சிறப்பாகவும், அதனை அடுத்துச் சோமுவின் பாடலும் இருக்கக் கண்டார். அவர்களின் புலமையைப் பாராட்ட விரும்பினார். அதனால் அங்கிருந்த அனைவரும் ஒன்றுபோல ஏற்றுக் கொள்ளுமாறு 'பாரதி' என்னும் பட்டத்தை வழங்கினார். பாரதி என்பதற்குக் கலைமகள் என்பது பொருளாகும்.

புலவர்களால் பாராட்டப் பெற்ற 'சுப்பு'வே சுப்பிரமணிய பாரதியார்; 'சோமு'வே சோமசுந்தர பாரதியார். நாவலர் கணக்காயர் டாக்டர் ச. சோமசுந்தர பாரதியார் என்பவரும் அச் சோமுவேயாம்.