உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

எட்டையாபுரம் அரசரிடம் சுப்பிரமணிய நாயகர் என்பார் பணி செய்து வந்தார். அரசர் அன்புக்கும் அரவணைப் புக்கும் மிக உரியவராக இருந்தார். அரசர்க்குரிய பட்டத்தாலே, சுப்பிரமணிய நாயகர், எட்டப்பபிள்ளை என்று அனைவரும் அன்புடன் அழைக்கும் நிலைமையைப் பெற்றார். அரசியாரின் வளர்ப்புப் பிள்ளை முத்தம்மாள் என்றொருத்தி இருந்தார். அவரை அரசியார் விருப்பப்படி எட்டப்ப பிள்ளை மணஞ்செய்து கொண்டார். இவர்களின் அன்பு வாழ்க்கையின் அரிய கனியாக 1879 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 27ஆம் நாள் சோமசுந்தர பாரதியார் பிறந்தார்.

எட்டப்ப பிள்ளையின் உறவினர் சோம சுந்தர நாயகர் என்பவர். அவர்மேல் அளவிலா அன்பு கொண்டிருந்தார் எட்டப்ப பிள்ளை. அதனால் தம் மைந்தருக்குச் சோமசுந்தரம் என்னும் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார். அரசியார் சத்தியானந்தன் என்னும் பெயராலே அழைத்தார். அதனால் சத்தியானந்த சோமசுந்தர பாரதியார் ஆனார்.ச. சோ. பாரதி என்பது சுருக்கப் பெயராயிற்று. நாவலர் பாரதியார் என்பது நாடறிந்த பெயரும் ஆயிற்று.

சோமு அரண்மனையிலே தவழ்ந்தார்! ஓடி ஆடினார்; மழலை பொழிந்தார்; அரசியாரின் செல்வப் பேரனாக வளர்ந்தார். ஐந்தாம் வயதில், அரண்மனை ஆசிரியராக இருந்த சங்கர கத்திரியாரிடம் தமிழ், வடமொழி எழுத்தறிவு பெற்றார். பின்னர்த் தெய்வசிகாமணி ஐயங்கார் என்பார் நடத்திய திண்ணைப் பள்ளிக்குச் சென்றார்.

சென்ற அன்றே ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர் ஒரு சிறுவனைப் பிரம்பு கொண்டு நன்றாக அடித்துவிட்டார். அதனைக் கண்டு அஞ்சினார் சோமு. கண்ணீர் வடித்துக் கொண்டே வீட்டுக்குத் திரும்பினார். பள்ளிக்குப் போக முடியாது என்று மறுத்துவிட்டார். அரசியார் துணை இருப்பதால் சோமுவை எவரும் கண்டிக்க முடியவில்லை. அரண்மனைப் பிள்ளைகளுடன் சேர்ந்து ஆடிப்பாடிப் பொழுதைக் கழித்தார்.

சோமுவுக்கு வயது ஒன்பது ஆயிற்று. இந்நிலையில் அரசியார் இயற்கை எய்தினார். அரவணைத்து வந்த அரசியார் மறைவு ஆறாத் துயராயிற்று. அரண்மனை வாழ்வு விடுபட்டது. தாய் தந்தையர் சொல்வழி நிற்க வேண்டிய நிலைமை உண்டாயிற்று. நின்ற கல்வி மீண்டும் பதினொன்றாம் வயதில் தொடங்கியது.