உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள் - 1

35

எட்டையாபுரத்தில் எட்டாம் வகுப்பு வரைக்குமே பள்ளி இருந்தது. அப் பள்ளியில் சோமு கற்று வந்தார். அக்காலத்தில் அரண்மனைக்குப் பல தமிழ்ப் புலவர்கள் வந்து போயினர்; சில வேளைகளில் புலவர்கள் விரிவுரைகளும் நிகழும். அக் காலத்தில் புராணங்கள், இலக்கியங்கள் ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பு ஆயிற்று. அவ்வாய்ப்பு, சோமுவுக்குத் தமிழ்ப் பற்றை ஊட்டிற்று. அப்பொழுது கேட்ட இராமாயண பாரதக் கதைகளில் உண்டாகிய கருத்து வேறுபாடுகளே பிற்காலத்தில் அரிய ஆராய்ச்சிகளாக வெளிவரத் தூண்டின எனலாம்.

எட்டாம் வகுப்புப் படிப்பை முடித்ததும் சோமுவுக்குத் திருமணம் செய்து வைக்கப் பெற்றோர் கருதினர். கடம்பூரைச் சேர்ந்த மீனாட்சியம்மை என்பவரை மணமுடித்து வைத்தனர். அப்பொழுது சோமுவின் வயது பதினைந்தே ஆகும். அக் காலத்தில் அப்படி இளமையிலே திருமணம் முடித்து வைப்பதும், அதற்குப் பின்னர்க் கற்கச் செல்வதும் இயல்பாக நடந்தன.

சோமு மேற்படிப்புப் படிக்க விரும்பினார். அதனால் திருநெல்வேலி சர்ச் மிசன் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். அவ்வுயர்நிலைப் பள்ளியுடன் கல்லூரியும் இணைந்து இருந்தது. அதனால் கல்லூரி இடைநிலை வகுப்பும் (எப்.ஏ.) அங்கேயே கற்றார். அதற்குமேல் பட்டப்படிப்புப் பெறவும் விரும்பினார். அதனால் அக் கல்லூரி முதல்வர் சாஃப்டர் என்பவர் சென்னைக் கிறித்தவக் கல்லூரி முதல்வர் மில்லர் துரைமகனாருக்கு ஒரு கடிதம் தந்து வாழ்த்தி அனுப்பினார்.

மில்லரின் அன்பால் சோமு கிறித்தவக் கல்லூரி மாணவரானார். பலரும் பாராட்டும் வண்ணம் படித்து இளங்கலைப் பட்டமும் (பி.ஏ.) பெற்றார். அப்பொழுது தவத்திரு மறைமலையடிகளார் இடத்தும், பேரறிஞர் பரிதிமால் கலைஞர் இடத்தும் பாடம் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதற்குமேல் சட்டக்கல்வி பெறவும் விரும்பினார். அவ்வாறே சட்டக் கல்லூரியிலும் சேர்ந்தார்.

இந்நிலையில் இனிய தந்தையார் எட்டப்ப பிள்ளை இயற்கை எய்தினார். குடும்பச் சுமை சோமுமேல் வீழ்ந்தது. அப்பொழுது இவருக்கு மக்கள் மூவர் இருந்தனர். அவர்களைக் காக்க என்ன செய்வது? தம் கல்விக்கு என்ன செய்வது? வறுமை சூழ்ந்தது. ஆனால், உள்ளந்தளராமல் உறுதியாக நின்றார் சோமு. அரசியார் அன்பளிப்பாகத் தந்த நிலம் 12 ஏக்கர் இருந்தது. அதனை