உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள் - 1

37

வேறொரு மொழியும் எடுத்துப் படித்தல் வேண்டும் என விதி இருந்தது. அதனால் மலையாளமும் கற்றார். 1913இல் தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.

அந்நாளில் நடைபெற்ற விடுதலைப் போராட்டம் நாவலரைக் கவர்ந்தது. அதன்மேல் ஈடுபாடு கொண்டார். கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரனார் தொடர்பு நாவலர்க்கு ஏற்பட்டது.மேடைகளில் சிதம்பரனாருடன் தோன்றினார்; முழங்கினார்; சொல்மழை பொழிந்தார். வ.உ.சி. செய்த தொண்டுகளில் துணிந்து பங்கேற்றார். மாதத்திற்கு 1000 உரூபா வருவாய் வந்து கொண்டிருந்த வழக்கறிஞர் தொழிலையும் விடுத்து 100 உரூபா ஊதியத்தில் கப்பல் கழகத்தில் பணி செய்தார். இவற்றால் ஆட்சியாளர்கள் நாவலரை ஐயுறத் தக்கவர் பட்டியலில் வைத்து அவ்வப்போது மறைமுகமாக ஆராய்ந்து வந்தனர். அதற்கெல்லாம் அஞ்சாமல் பணி புரிந்தார்.

1919இல் நெல்லையிலும், 1920இல் மதுரையிலும் மாநிலக் காங்கிரசு மாநாடு நடைபெற ஏற்பாடு செய்தார். இவற்றின் செயற் பொறுப்பாளராக நாவலரே இருந்தார். காந்தியடிகளைத் தூத்துக்குடிக்கு ஒரு முறையும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு ஒரு முறையும் முயன்று வரவழைத்தார். அவ்வப்போது காங்கிரசுக் கட்சிக்கு நன்கொடை திரட்டித் தந்தார். தீண்டாமை ஒழிப்புக்குப் பாடுபட்டார். இவர்தம் ஈடுபாடு இவர் மக்களிடத்தும் விளங்கியது. அதனால் இவர்மம் திருமகனார் இலக்குமிரதன் பாரதி,திருமகளார் இலக்குமி பாரதி, மருமகனார் கிருட்டிணசாமி பாரதி ஆகியோர் விடுதலைப் போராட்டத்தில் சிறந்த பங்கு கொண்டு பணியாற்றினர்.

1937இல் திரு. இராசகோபாலாச்சாரியார் சென்னை மாநில முதலமைச்சர் ஆனார். உடனே பள்ளிகளில் இந்தியைக் கட்டாய் பாடமாக்கினார். அதனை எதிர்த்தவர்களுள் நாவலர் குறிப்பிடத் தக்க ஒருவர் ஆவர். முதலமைச்சருக்கு வெளிப்படைக் கடிதம் எழுதினார். சென்னை முதலிய இடங்களில் இந்தி எதிர்ப்பு மாநாடுகள் கூட்டித் தீர்மானங்கள் நிறைவேற்றி அனுப்பினார். அதனால் கட்டாய இந்தித் திட்டம் கைவிடப் பெற்றது. 1948இல் மீண்டும் இந்தியைப் புகுத்தினர். அப்பொழுதும் நாவலர் எதிர்த்தார்.இந்தி கட்டாயம் என்னும் நிலை ஒழிந்தது. இவற்றால் நாவலர் நாட்டுக்கும் நற்றமிழ் மொழிக்கும் செய்த தொண்டுகள் நன்கு புலப்படும்.