உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

நாவலர் தமிழ்த் தொண்டு, ஆராய்ச்சி வன்மை ஆகியவற்றை அண்ணாமலை அரசர் நன்கு அறிந்தார். அதனால் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு விரும்பினார். தமிழ் மேல் கொண்ட பற்றால் நாவலர் தட்டாமல் அப்பொறுப்பை ஏற்றார். 1933 முதல் 1938 வரை பணிபுரிந்தார். அந்நாளில் இவர் செய்த ஆராய்ச்சிகளும் ஆக்கப் பணிகளும் மிகப் பலவாகும்.

நாவலர் பல்வேறு மாநாடுகளில் பங்கு கொண்டார். தமிழ் மாநாடுகளும், விழாக்களும் அவர் சொல் மழையால் செழித்தன. அவர் நிகழ்த்திய ஆராய்ச்சி உரைகள் நூல் வடிவம் பெற்றன. "தசரதன் குறையும் கைகேயி நிறையும்," "திருவள்ளுவர்" என்பவை குறிப்பிடத் தக்கவை. இன்னும் "சேரர்பேரூர்,""சேரர் தாய முறை,” “நற்றமிழ்”, “பழந்தமிழ் நாடு" என்பவை நாவலர் படைத்த ஆராய்ச்சி நூல்கள் ஆகும். "மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி”, “மாரிவாயில்” என்பவை செய்யுள் நூல்கள். இனித் தொல்காப்பியப் பொருட்படலத்திற்கு பொருட்படலத்திற்கு அவர் இயற்றிய “புத்துரை” உரையுலகில் ஒரு புதுத் திருப்பத்தை உண்டாக்கி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. நாவலர் பேச்சும் எழுத்தும் செயல் மாண்பும் நாட்டு மக்களையும், அறிஞர்களையும் வயப்படுத்தின. தமிழ் உலகில் ஓர் அரிமாவாக உலா வந்தார்.

ஈழநாடு நாவலரை வரவேற்றது. அந்நாடுதான் 'நாவலர்' என்னும் பட்டத்தை வழங்கிச் சிறப்புச் செய்தது. ஈழநாட்டுப் புலவர் 'பாரதி' எனப் பட்டம் வழங்கியதை முன்னரே அறிவோம். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் 'டாக்டர்' என்னும் பட்டத்தை வழங்கிச் சிறப்புக் கொண்டது. மதுரைத் திருவள்ளுவர் கழகம் 'கணக்காயர்' என்னும் பட்டத்தைக் கனிந் தளித்துப் பெருமை கொண்டது. நாவலர் பேச்சைக் கேட்பதிலே மேடைகள் கவின் கொண்டன. அவர் எழுத்துகளைத் தாங்குவதிலே இதழ்கள் எழில் பெற்றன.

நாவலர்க்கு, மீனாட்சியம்மையை மணமுடித்த செய்தியை அறிவோம். அவர்கள் நல்லற வாழ்வின் பயனாக இராசாராம் பாரதி, இலக்குமிரதன் பாரதி, இலக்குமி பாரதி என்னும் நன்மக்கள் மூவர் தோன்றினர். பின்னர் 1927 இல் நாவலர்க்கும் வசுமதி அம்மையார்க்கும் திருமணம் நிகழ்ந்தது. அவர்தம் அன்பு வாழ்வின் பயனாக மீனாட்சியம்மை, லலிதா அம்மை என்னும் இரு செல்வியர்கள் தோன்றினர். தோன்றிற் புகழொடு தோன்றுக