உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள் - 1

39

என்பதற்கு ஏற்பப் பல்வேறு துறைகளிலும் பணிகளிலும் இம் மக்கள் சிறப்புற்று விளங்குகின்றனர்.

தூத்துக்குடி வாழ்வும், கப்பல் கழகப் பணியும் விடுதலை வீரர் வ.உ.சி. அவர்களுடன் இணைத்தமையை அறிந்தோம். அதுபோல் எட்டையாபுரத்தில் பிறந்து வளர்ந்தமையும், மொழிப்பற்றும் வாழ்நாள் எல்லாம் தேசியகவி சுப்பிரமணிய பாரதியாருடன் இணைத்து வைத்தது. மதுரைத் தமிழ்ச் சங்கம், கரந்தைத் தமிழ்ச் சங்கம் முதலியவை தமிழகத்துப் பேரறிஞர் களுடன் எல்லாம் தொடர்புபடுத்தியது. அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பணி சீரிய செந்தமிழ் மாணவர் பலரை வழங்கியது. இவ்வெல்லா வகைகளாலும் குறையா நிறைவு எய்தியவர் நாவலர் பாரதியார் ஆவர்.

நாவலரின் எண்பதாம் ஆண்டு நிறைவு விழா மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சிறப்பாகக் கொண்டாடப் பெற்றது. அதற்குப் பின்னர்த் தமிழகப் புலவர் குழுவின் சார்பிலும் அவ்விழா தமிழ்ச் சங்கத்தில் கொண்டாடப் பெற்றது.

எண்பது வயது நிரம்பியவர்களை ஆயிரம் பிறை கண்டவர் எனப் பாராட்டுவர். அப் பாராட்டுப் பெற்ற நாவலர், படைவீரர் வந்தும் நடை கற்கத் தக்க பீடு நடையுடையவர். நாட்காலை உலாவுதலைத் தவறாதவர். ஒருநாள் உலாவச் சென்றபோது சாலையிலே மயக்கமுற்று வீழ்ந்தார். பின்னர்ச் சில நாள்களில் நலம் பெற்றார். மீண்டும் வீட்டிலேயே மயக்கமுற்று வீழ்ந்தார். அரிய மருத்துவங்கள் பெரிதும் முயன்று செய்யப் பெற்றன. அம்முயற்சிகள் அனைத்தும் அவரை மேலும் சில நாள்களே உயிரோடு இருக்கச் செய்தற்குப் பயன்பட்டன! உடையை மாற்றிக் கொள்வதுபோல, உடலை மாற்றிச்செல்வது தானே உயிரின் இயற்கை! கூட்டை விட்டுப் பறவை பறந்து வெளியே செல்வது போன்றது தானே உடலை நீத்து உயிர் செல்லும் செலவு? பூங்கொடியில் இருந்து ஒரு மலர் அமைதியாக உதிர்வதுபோல நாவலர் நல்லுயிர் உடலை விட்டுப் பிரிந்தது. அது 1959 திசம்பர் 14ஆம் நாள் ஆகும்; தமிழ்த்தாய் கண்ணீர் வடித்துக் கசிந்தழுத நாள்களுள் அந்நாளும் ஒன்றாயிற்று.

தலைப்பாகை :

சில சுவையான நிகழ்ச்சிகள்

சென்னையில் வருவாய்த் துறை அலுவலகத்தில் நாவலர் பணி யாற்றினார் அல்லவா! அங்கே ஒரு வழக்கம் இருந்தது. ஆங்கிலேயர்