உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

மடங்கள், கோயில்கள் ஆகியவற்றில் நடைபெற்றாலும், பெரும் பாலும் திண்ணைகளில் நடைபெற்றமையால் திண்ணைப் பள்ளிகள் என்றே அழைக்கப்பெற்றன. திண்ணையின் உறுதிபோலவே அங்குக் கற்ற கல்வியும் மிக உறுதியாக அமைந்தது.

வெள்ளகாலில் பள்ளிக்கூடம் எதுவும் இல்லை. அதனால் பழனியப்பர் தம் மைந்தரைத் திருநெல்வேலிக்கு அழைத்துச் சென்றார். அங்கே தெற்குப் புதுத் தெருவில் கணபதி ஆசிரியர் திண்ணைப்பள்ளி இருந்தது. பெரும்புலவர் அழகிய சொக்கநாத பிள்ளையின் தந்தையாரே கணபதி ஆசிரியர். அவரும் மிகுந்த புலமையாளராக விளங்கினார். அவரிடம் கல்வி பயிலுமாறு பழனியப்பர் ஏற்பாடு செய்தார். அப் பள்ளியிலே நான்கு ஆண்டுகள் வெ.ப. சு. கற்றார். அக் கல்வி அவர்தம் எதிர்காலப் புலமைக்கு நல்ல அடித்தளமாக அமைந்தது.

பின்னர், அரசடிப் பாலத் தெருவில் உள்ள கிறித்தவப் பள்ளியில் வெ.ப.சு. சேர்ந்தார். அங்கே ஆங்கிலமும் தமிழும் கற்க வாய்ப்பு இருந்தது. அங்கே ஓராண்டு கற்ற பின் திருநெல்வேலிப் பாலம் இந்துக் கல்வி நிலையத்தில் பயின்றார். 1876 இல் பள்ளி இறுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். பள்ளியில் பெற்ற கல்வி இவ்வாறு சிறக்க, வெளியில் பெற்ற கல்வி நிலையை அறிவோம்.

பழனியப்ப முதலியாரின் உடன் பிறந்த நங்கையரே திருநெல்வேலி மேடை தளவாய் குமாரசாமி முதலியாரின் வாழ்க்கைத் துணைவியார் ஆவர். அவர் வெ. ப.சு.வின் அத்தையார் அல்லரோ! அவர் வீட்டில் முத்துசாமிப் பிள்ளை என்னும் பெயருடைய ஒருவர் பணியாளராக இருந்தார். அவர் கண்ணொளி இல்லாதவர். எனினும் பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், கந்தபுராணம், இராமாயணம், பாரதம் முதலிய நூல்களிலுள்ள கதைகளையெல்லாம் நன்றாகத் தெரிந்தவர்; சுவையாகக் கேட்டு மகிழுமாறு சொல்லும் திறமை வாய்ந்தவர். அதனால் ஓய்வு கிடைக்கும் பொழுதுகளிலெல்லாம் அவரிடம் அக் கதைகளைக் கேட்டு மகிழ்ந்தார் வெ. ப.சு. அதனால், அந் நூல்களைத் தாமே ஆர்வத்துடன் கற்கத் தொடங்கினார். அப்பொழுது இவருக்கு வயது பன்னிரண்டே ஆகும்.

தளவாய் அரண்மனையில் பெரும்புலவர் அழகிய சொக்க நாத பிள்ளையை ஒருமுறை கண்டு உரையாடினார். தாம் கற்ற தமிழ்நூல்களைப் பற்றிப் பேசினார். இவர் தமிழ்ப் புலமையை அறிந்து மகிழ்ந்தார் சொக்கநாதர். அதனை வளர்ப்பதற்கு ஆவல் கொண்டார்.