உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள் - 2

47

திருநெல்வேலித் தெற்குப் புதுத் தெருவில் ஒரு சதுக்கம் இருந்தது. இராசவல்லிபுரம் வள்ளல் முத்துசாமிப் பிள்ளை திருநெல்வேலிக்கு வந்தபோதெல்லாம் அச் சதுக்கத்திலேதான் தங்குவார். அவர் தமிழ்ப் புலவர்களைத் தரம் அறிந்து பேணிக் காப்பவர்; வேண்டுவார் வேண்டுவன நல்குபவர்; அதனால் அச் சதுக்கம் தமிழ் அறிஞர்களின் உறைவிடமாகத் திகழ்ந்தது. அவ்விடத்திற்கு வெ. ப. சு. வை அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தினார் சொக்கநாதர். அத் தொடர்பு, "புற்பறிக்கப் போனவருக்குப் பொற்குவியல் கிடைத்தது" போன்ற இன்பத்தைத் தந்தது.

வெ.ப.சு. வாய்த்த போதெல்லாம் சதுக்கத்துக்குச் சென்றார். தமிழ் ஆராய்ந்தார்; புலவர்கள் உரைகேட்டு உவந்தார். அவர்களோடு அளவளாவிப் பழகும் வாய்ப்புப் பெற்றார். அவ்வகையில் பெற்ற அறிஞர்களில் வேம்பகதூர் பிச்சுவையர், கல்போது புன்னைவனக் கவிராயர், மு. ரா. அருணாசலக் கவிராயர், கந்தசாமிக் கவிராயர், சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

அறிவுடையார் தொடர்பு என்ன செய்யும்? அறிவை வளர்க்கும் ஆர்வத்தை உண்டாக்கும் அல்லவா! வெ.ப.சு. எண்ணியதை எண்ணிய வண்ணம் இனிக்கப் பாடும் கவிஞர் ஆனார்! புலவர் புகழும் புலமை எய்தினார்!

இந்நிலையில் கவிராச நெல்லையப்ப பிள்ளையின் நட்பும் வெ.ப. சு. விற்குக் கிடைத்தது. கவிராயர் வீட்டின் பின்பக்கத் தோட்டப் புறத்தில்தான் சதுக்கம் இருந்தது. அதனால் அவரை அடிக்கடி காணவும், நெருங்கிய நட்புக் கொள்ளவும் வாயப்பு ஏற்பட்டது. இருவரும் கலந்து இலக்கிய இலக்கணங்களை ஆராய்ந்தனர்! “கல்விக்கு இருவர்" என்பது பழமொழி அல்லவா! அதனால் இருவரும் பெரும்பயன் கொண்டனர். அப்பொழுது இவருக்கு வயது பத்தொன்பதே ஆகும். அவ்வயதில் தானே பள்ளியிறுதி வகுப்பும் தேர்ச்சி பெற்றார்!

"பாம்புப் புற்றுள் கை வத்தாலும் வைப்பேன்; பாடப் புத்தகத்துள் கைவையேன்" என்று வாளா பொழுது போக்கித் திரிபவர்களும் மாணவர்களாக உள்ளனர். பள்ளிநூல் ஒன்றை யன்றித் தள்ளி ஒரு வரியும் படிக்காத மாணவர்களும் உளர். பள்ளிப்படிப்பையும் பாழாக்கி, பணத்தையும் பாழாக்கி, பண்பாட்டையும் பாழாக்கிக் கொள்பவர்களையும் பார்க்கிறோம்! ஆனால் வெ. ப. சு. எத்தகையர்?