உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள் - 2

49

திருநெல்வேலி வட்ட அலுவலகத்தில் எழுத்தர் பணிபுரிய ஏற்பாடு செய்தார். பணியும் மேற்கொண்டார் வெ.ப.சு. அப்பொழுது சென்னையில்புதிதாக வேளாண்மைக் கல்லூரி தொடங்கியது. அதில் சேர ஆர்வமுற்றார். ஆங்குச் சென்று ஆர்வத்துடன் பயின்று 1884 ஆம் ஆண்டில் (GM.A.C. என்னும்) பட்டம் பெற்றார். அப் பட்டம் பெற்றதும் கால்நடைநோய் மருத்துவர்பணி வாய்த்தது.

சில ஆண்டுகளில் கால்நடை மருத்துவத் துறையையே அரசு எடுத்துவிட்டது. அதனால் வெ.ப. சு. வருவாய்த் துறைக்கு மாற்றப்பட்டார். அத்துறையில் நான்கு ஆண்டுகள் பணி புரிந்தார். மீண்டும் 1895இல் கால்நடை மருத்துவத் துறையை அரசினர் உண்டாக்கினர். அதனால் அப் பணிக்குத் திரும்பினார். திறமையாகக் கடமை புரிந்தார். மேல் அதிகாரிகளின் பாராட்டையும், பொதுமக்களின் அன்பையும் ஒருங்கே பெற்றார்.

வெ.ப. சு.வின் ஆர்வத்தையும் ஆற்றலையும் உணர்ந்த அரசினர் இவரைக் கால்நடை மேற்படிப்புப் பட்டம் பெறுவதற்காகச் சம்பளத்துடன் பம்பாய்க்கு அனுப்பினர். அப் படிப்பில் பல பாடங்களில் முதன்மையாகத் தேர்ச்சி பெற்றுப் பொற்பதக்கங்கள் பெற்றார். அப்பொழுது இவர் பெற்ற பட்டம் G. B. V. C. என்பதாகும்.

மேற்படிப்புப் பெற்ற வெ. ப. சு. கால்நடை உயர் கண்காணிப்பாளர் பதவி பெற்றார். பின்னர் மாவட்டத் துணைக் கால்நடை மருத்துவராகவும் பதவி உயர்வு பெற்றார். அனைவரும் பாராட்டும் வண்ணம் பணி செய்து 1915 ஆம் ஆண்டில் தம் ஐம்பத்து எட்டாம் வயதில் ஓய்வு பெற்றார்.

அரசுப் பணியில் பெறும் ஓய்வு சிலருக்கே ஓய்வாக இருக்கும். பொதுத் தொண்டில் ஈடுபாடும், ஆராய்ச்சியில் ஆர்வமும் உடையவர்க்கு என்றாவது ஓய்வு உண்டோ? எந்த வேலை ஆயினும் தட்டிக் கழிப்பவர்க்கு எந்நாளும் ஓய்வுதான்! எந்தவேலை ஆயினும் ஆர்வத்தோடு ஈடுபடுபவர்க்கு எந்நாளும் ஓய்வு இல்லை! வயதைப் பொறுத்தது அன்று ஓய்வு உழைப்பு என்பவை. உள்ளத்தைப் பொறுத்தனவேயாகும். இல்லாவிடின் வெ.ப. சு. தம் எண்பதாம் ஆண்டு நிறைவின் பொழுதிலும் இளமையாக இருந்திருக்க முடியுமா? எட்டு வயதிலேயே எத்தனை கிழவர்களைக் காண்கிறோம்!