உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. விருதை சிவஞான யோகிகள்

எல்லா ஊரும் எம் ஊரும் எம் ஊரே; எல்லா மக்களும் எம் உறவினரே' என்னும் உயர்நிலையில் வாழ்பவர் பெரியோர். அத்தகைய பெரியோர்களுள் ஒருவராக விளங்கியவர் விருதை சிவஞான யோகிகள் ஆவர்.

தமிழ் நாட்டின் பகுதிகளுள் ஒன்று கொங்குநாடு என்பது. அது சேலம், கோவை மாவட்டங்கள் அடங்கிய பகுதியாகும். அக் கொங்கு நாட்டில் அவிநாசி என்பதோர் ஊர் உண்டு. அவ்வூரின் பழம்பெயர் 'திருப்புக் கொளியூர்' என்பதாகும்.

திருப்புக்கொளியூரில்

வாழ்ந்த ஒரு பெருமகனார் ராமசாமிப் பிள்ளை என்பார். அவர் தம் அருமை மனைவியார் கிருட்டிணம்மாள் என்பார். இருவரும் இணைபிரியாப் புறாக்கள்போல் இனிய இல்லறம் நடத்தினர். எனினும் பல்லாண்டுகளாக மகப்பேறு இன்றி வருந்தினர். இறைவன் திருவருளை வேண்டிக் கிடந்தனர். அவன் திருவருளே போல 1840 ஆம் ஆண்டிலே ஒரு திருக்குழந்தை பிறந்தது. குடிவிளங்கப் பிறந்த அச் செல்வக் குழந்தையே சிவஞானம் ஆகும்.

சிவஞானக் குழந்தை இனிய மழலை பொழிந்து ஓடியாடி மகிழ்வித்தது. காலங்கடந்து கையில் கிடைத்த பிள்ளைக்கனி அமுதை, எண்ணி எண்ணிப் பெருமிதம் கொண்டனர் பெற்றோர். அதன் அறிவு நிறைந்த ஆடல்களிலும் பாடல் களிலும் இன்பம் பெருகி நின்றார்கள். குழந்தை சிவஞானத்திற்கு வயது மூன்றாயிற்று. தந்தை இராமசாமி தம்மிரு கண்களையும் என்றும் திறவாமல் மூடிவிட்டார்.

மூன்றாம் அகவையிலேயே தந்தையை இழந்தவன் ஆனான் சிவஞானம். கணவனை இழந்து கண்ணீரே வடிவானார் கிருட்டிணம்மாள்; சிவஞானத்தை உயிராகக் கொண்டு சிறிது தேறி இருந்தார். ஈராண்டுகள் நகர்ந்தன. சிவஞானத்திற்கு வயது ஐந்தே! அந்தோ! சிவஞானம், 'தந்தையிலி, தாயுமிலி' என்னும் நிலைமையை அடைந்தான்.