உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

"தந்தையும் தாயும்,பொடித்திருமேனி அம்பலத்தாடும் புனிதநீ" என்று கரைந்தழுத வள்ளலார் வாழ்வு, சிவஞானம் வாழ்வாயிற்று! அனலில் சுடாமல் அடித்துத் தட்டாமல் அணிகலம் ஆவதில்லையே!

சிவஞானம் கயிற்றுந்த பட்டம் ஆனான். ஆனால், கயிறறுந்த பட்டமும் சில வேளைகளில் மரக்கிளையில் மாட்டிக் கொண்டு காற்றில் ஆடுவது இல்லையா! அதுபோல் தாயுடன் பிறந்த மாமன்மார் வீட்டிலே வளரும் வாய்ப்பு வாய்த்தது.

கோவையிலே இருந்தார் பெரியமாமனார். அவர் அரவணைப்பில் சென்றான் சிவஞானம். 'இளமையில் கல் என்பது சிவஞானத்திற்குத் தெரிந்து பயன் என்ன? மாமனார்க்கு அல்லவோ தெரியவேண்டும்! அவர்க்கு நன்கு தெரிந்தது! சிவஞானத்தை ஒரு திண்ணைப் பள்ளியிலே சேர்த்தார். பசித்தவனுக்குப் பாற்சோறு கிடைத்ததுபோல் ஆயிற்று சிவஞானத்திற்குப் படிப்பு. பாடவரையறை, காலவரையறை அக்காலப் பள்ளிக்கு இல்லை! ஆசிரியர் உள்ளமும், மாணவர் ஆர்வமுமே வரையறை! சிவஞானம் சில ஆண்டுகளிலே சிறந்த அறிவாளியானான்.

சிவஞானத்தின் இளையமாமனார் நீலமலையில் இருந்தார். சிவஞானத்தைத் தம் அரவணைப்பில் கொண்டு சென்றார். பெரியமாமனார் தம்மருமகனை, 'தமிழ்ச் சிவஞானம்' ஆக்கி வைத்திருந்ததற்கு மகிழ்ந்தார். தாம், 'ஆங்கிலச் சிவஞானம்' ஆக்குவது கடன் எனத் துணிந்தார். ஆங்குள்ள குன்னூர் (குன்றூர்) ஆங்கிலப்பள்ளியில் சிவஞானத்தைச் சேர்த்தார். செந்தமிழ்ச் சிவஞானம் ஆங்கிலத்திலும் செழித்தான். நீலமலைக் காட்சிகள் அவன் நெஞ்சைக் கவர்ந்தன. அவனிடம் உறங்கிக் கிடந்த தமிழ்க்கவி ஊற்றெடுத்தது.

சிவஞானம் 'தவஞானம்' ஆகவேண்டுமே! அதற்கென வாய்த்தார் இரண்டாம் மாமனார். திருப்பூரை அடுத்த பல்லடத்திலே வாழ்ந்தார் அவர். ஆங்குச் சென்றான் சிவஞானம். ஆங்கிருந்த பெரியார் அருளானந்த அடிகள் அன்புக்கு ஆட்பட்டான்!

பல்லடத்தில் வரதராசலு நாயுடு என்பார் ஒருவர் இருந்தார். அவர் ஒரு பஞ்சாலை உரிமையாளர். அவர் பாதுகாப்பிலே இருந்தார் அருளானந்த அடிகள். இளைய சிவஞானம் அந்த முதிய ஞானியைக் கண்ட நாள் முதல் அவர் அடிமையானான். அறிவுச் செல்வமும் கைவரப்பெற்றான்.