உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

66 'கசடனெனைக் கயமை போக்கக்

குருவாகி வந்தசச்சி தானந்த

99

என்றும் பாடிப் போற்றினான். பார்த்த பணியை உதறினான்; ஊர் ஊராகச் சென்று இறைவன் அடித்தொண்டு செய்வதையே பணியாகக் கொண்டான். இப்பொழுது சிவஞானம் அல்லன்; சிவஞான யோகிகள்!

உலாவந்த யோகிகள் பழனியில் தங்கினார். பழனிச் செவ்வேளைப் பணிந்து பாடியும் ஆடியும் மகிழ்ந்தார்.அப்பழனிச் செவ்வேளைப் பாடும் பணியே பணியாகக் கொண்டு விளங்கிய மாம்பழக் கவிச்சிங்க நாவலரைக் கண்டார். கண்ணொளியற்ற அப் புலவர் பெருமான் பாடிய கட்டிப் பாகினும் இனிய பாடலில் ஈடுபட்டார். அப் பெருமகனாரை அணுகிச் சங்க இலக்கியங் களைப் பாடங்கேட்டார்! போகிய இடங்களில் எல்லாம் யோகிகளுக்குப் பல்கலைச் செல்வங்கள் கிட்டின! அவரோ பல்கலைச் செல்வராக விளங்கினார்.

பழனியில் யோகிகள் ஆங்கிலமும் தமிழும் கற்பிக்கும் பள்ளிக்கூடம் ஒன்றை ஏற்படுத்தி நடத்தினார். பின்னர்ப் பல ஊர்களுக்கும் சென்று விருதுநகர்க்கு வந்தார். அங்கே இருந்த ஆடற் செல்வர் சக்கரபாணி அடிகளுடன் நட்புக் கொண்டார். அக்கலையிலும் தேர்ந்தார். விருதுநகரிலேயே நெடுங்காலம் உறைந்தார். விருதுநகர் புலவர்களால் 'விருதை' என்று அழைக்கப் பெறும். ஆதலால் யோகிகள், "விருதை சிவஞான யோகிகள்” ஆனார்.

அக்காலத்தில் சோமசுந்தர நாயகர் என்பார் ஒருவர் விளங்கினார். அவர் சைவ சித்தாந்தத்தில் ஒப்பில்லா வித்தகர். அவரை அடுத்தார் யோகிகள். சித்தாந்த சாத்திரத்தில் பெரும்புலமை பெற்றார்.

கற்ற கலைகளால் பெற்ற பயன் என்ன? மற்றவர்களுக்குப் பயன்படுவது அல்லவா பெற்றதன் பயன்! அதனால் யோகிகள் 'இலவச மருத்துவமனை' ஒன்றனை விருதுநகரில் ஏற்படுத்தி நடத்தி வந்தார். எவருக்கு இலவசம்? கொடுக்க இயலாதவர்க்கு இலவசம்! மருந்துடன் உண்ணும் பழவகைகளும்கூட இலவசமாகத் தருவதுண்டு. ஆனால், செல்வரிடம் நிரம்பக் கட்டணம் வாங்குவார்! இருப்பவரிடம் வாங்க வேண்டியதுதானே! இருப்பவரிடம் பணம் வாங்கி இல்லாதவர்க்கும் மருத்துவம் செய்தார் யோகிகள். இஃது அவர்கள் கைக்கொண்ட புதுமையான பொதுநிலையறம்!