உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள் - 2

57

விருதுநகரில் சொக்கநாதர் கோயில் ஒன்று உண்டு. அக் கோயிலில் சில திருப்பணிகள் செய்ய விரும்பினார் யோகியார். எத் திட்டத்திலும் புதுமை காண்பது அவர்தம் அறிவுக் கூர்மை. அதனால், இரண்டாயிரம் மண் கலயங்கள் செய்வித்தார். அவற்றை எடுத்துக் கொண்டு, அக் கோயிலை வழிபடும் அன்பர் வீடு தோறும் ஒவ்வொரு கலயத்தை வைத்தார். சமையலுக்கென அவ்வீட்டார் அரிசி எடுக்கும்போது அக் கலயத்தில் ஒரு கைப்பிடியளவு அரிசியோ அவர்கள் விரும்பிய அளவிலோ போட்டு உதவுமாறு வேண்டினார். அத் திட்டத்தை அருமையாக நடத்தினார். வீடுதோறும் தந்த பிடி அரிசித் திட்டத்தால் சொக்கநாதர் கோயிலின் இரண்டாவது சுற்றுச் சுவர் எழும்பியது. கீழைக் கோபுரத்தில் சில பணிகளும் செய்யப் பெற்றன. பாரமென எவருக்கும் தோன்றாமல், பாரமான பணிகளை யெல்லாம் முடித்தவர் யோகியார்!

யோகியார் மேலும் சில திருப்பணிகள் செய்ய விரும்பினார். அதற்குத் தக்கவர்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு வெளியூர்களுக்குச் சுற்றுலாக் கொண்டார். அதற்காகத் திருநெல்வேலியைச் சார்ந்த இராசவல்லிபுரம் சென்றார். ஆங்கிருந்த வள்ளல் முத்துசாமிப் பிள்ளையின் அன்பைப் பெற்றார். செப்பறை, திருச்செந்தூர், திருநெல்வேலி முதலிய திருக்கோயில்களுக்குச் சென்று பதிகமும் நூலும் பாடிப் பரவசமுற்றார். செட்டிநாட்டுக் கண்டனூர்க்குச் சென்று பெரிய திருப்பணிச் செட்டியார் என விளங்கிய இராமசாமிச் செட்டியார் அன்பில் ஒன்றினார்.

செட்டியார் மூன்று திங்கள் அளவாக ஊணும் செல்லாமல், உறக்கமும் கொள்ளாமல் துன்புற்றார். அவரைத் தேற்றித் திருவருளை எண்ணி அமைதி கொள்ளுமாறு கூறித் திருநீறு வழங்கினார்."மந்திர மாவது நீறு” எனத் தொடங்கும் திருநீற்றுப் பதிகத்தை ஓதி அவரையும் ஓதச் செய்தார். அன்று இரவு அயர்ந்த உறக்கம் உண்டாயிற்று. ஊணும் சீராகச் சென்றது. காலையிலே யோகியாரை அழைப்பித்து வழிபட்டுச் சிறப்புச் செய்தார் செட்டியார்.யோகிகள் மேற்கொண்டிருந்த திருப்பணிக்கு ஆயிரம் வெண்பொன் வழங்கினார். பிறரும் பொருளுதவி செய்யுமாறு செய்தார். அதன்பின் யோகியார் கண்டனூர்க் கயற்கண் அம்மைமேல் பதிகம்பாடி அங்கிருந்து விடைபெற்றுக் கொண்டு விருதுநகர்க்கு வந்தார்.