உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

யோகிகள் விருதுநகரில் இருந்தார். அக் காலத்தில் ஓராண்டு, மழையின்றி மக்கள் அல்லல் உற்றனர். குடி நீர்க்கும் பெருந் தட்டுப்பாடு உண்டாயிற்று. அன்பர் வேண்டுதற்கு ஏற்ப அறுமுகக் கடவுளை நோக்கிப் பதிகம் பாடினார். அதன் ஏழாம் பாடலைப் பாடிக் கொண்டிருக்கம் போதே மழை பொழிந்தது!

யோகிகள் ஒரு பூங்கா உண்டாக்கினார். அப் பூங்காவில் கோயிற்பசு புகுந்தது. அது பூங்காவை அழித்துவிடும் என அஞ்சினார். அதனால் சில சுடு சொற்களைக் கூறினார். அப் பசு அச் சோலைப் பக்கம் வருவதே இல்லை! கோயிலுக்குள்ளும் வந்து தங்குவது இல்லை!

திருவாதிரைத் திருநாள் வந்தது. பசு வழிபாடு செய்வது வழக்கம். ஆனால், பசு கோயில் எல்லைக்கு எவ்வளவு முயன்றும் வரவில்லை. இச் செய்தியை அறிந்தார் யோகிகள். தாம் கூறிய சுடு சொற்களின் விளைவே என உணர்ந்து வருந்தினார். இறைவனிடம் வேண்டினார்! மறுநாள் காலையிலே சோலைக்குப் புல் மேய வந்தது. கோயிலுக்குள்ளும் தங்கியது.

விருதுநகர் சொக்கநாதர் கோயில் திருப்பணி நடந்து கொண்டிருந்தது. 30 அடி உயரத்தில் ஒரு பெரிய கல் ஏற்றப்பட்டது. அக் கல் இருப்பில் இருந்து நழுவி விழத் தொடங்கியது. அப்பொழுது யோகிகள் வேலையாட்களுடன் கீழே நின்று கொண்டிருந்தார். அக் கல் வீழ்ந்து கொன்று விடுதல் உறுதி என உணர்ந்த யோகிகள் 'சிவ! சிவ' எனக் கண்களை மூடிக் கொண்டு கூறினார். விழுந்த கல் சாரத்தில் பட்டு நின்றது.

திருவையாற்றில் இருந்து திருநெய்த்தானத்திற்குச் சென்றார் யோகிகள். அங்கிருந்து திருப்பூந்துருத்திக்குப் போக விரும்பினார். கையில் பூக்குடலையுடன் ஓதுவார் ஒருவர் தோன்றினார். திருப்பூந்துருத்திக்கும் திருவாலம் பொழிலுக்கும் அழைத்துச் சென்றார். கண்டியூருக்குப் போகும் வழியைக் காட்டி "நீங்கள் அங்கே போகும்போது நண்பகல் வழிபாடு நடைபெறும்" என்று சொல்லி மறைந்தார். அவ்வாறே நிகழ்ந்ததை அறிந்து யோகிகள் வியந்தார்.

யோகிகள் திருவாரூருக்குப் போனார். அங்குச் சில நாள்கள் தங்கினார், இவரிடம் மூக்குப் பொடி போடும் பழக்கம் உண்டு. ஆனால், கோயிலுக்குள் போடுவது இல்லை. கோயிலுக்குள் இருக்கும்போது அவ்வெண்ணம் முதிர்ந்ததால் எவரும்