உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

""

3. பேராசிரியர் “கா. சு.' பிள்ளை

'காசு' என்பதற்குப் 'பொன்' என்பது பொருள். தமிழுக்குக் 'காசு' எனத் திகழ்ந்தவர் பேராசிரியர் கா. சு. பிள்ளை ஆவர். கா. சுப்பிரமணிய பிள்ளை என்பது அவர் தம் முழுப் பெயர்.

திருநெல்வேலியிலே ‘பி. ஏ.' பிள்ளை என ஒருவர் இருந்தார். அவர் புட்டாபுரத்தியம்மன் கோயில் தெருவில் வாழ்ந்தார். அவரே சைவ வேளாளர் குடியில் முதற்கண் பி. ஏ. பட்டம் பெற்றவர். ஆகலின் பி. ஏ. பிள்ளை என்று அழைக்கப் பெற்றார். காந்திமதிநாத பிள்ளை என்பது அவர் தம் இயற்பெயர்.

பி. ஏ. பிள்ளையின் மைந்தர் எத்தகையவர் ஆனார்? "புலிக்குப் பிறந்தது பூனையாகுமா" என்பது பழமொழி .பி.ஏ. பிள்ளையின் மைந்தர் எம். எல். பிள்ளை ஆனார். எம். எல். என்னும் உயர் பட்டம் பெற்ற முதற்சைவ வேளாளர் இவரே ஆவர். மகன் தந்தைக்குச் செய்யும் உதவி இதைப் பார்க்கிலும் ஒன்று உண்டா?

காந்திமதி நாதபிள்ளையின் அருமைத் திருமனைவியார் மீனாட்சியம்மையார். இவர் தம் இல்லறத்தின் கனியாகக் காசு திருவள்ளுவராண்டு 1919 ஐப்பசித் திங்கள் 22ஆம் நாள் (5-11-1888) பிறந்தார்.

புட்டாபுரத்தியம்மன் கோயில் தெருவில் ஒரு திண்ணைப் பள்ளி இருந்தது. அதில் நம் காசு மூன்றாண்டுக் காலம் பயின்றார். தந்தையாரிடம் தனிப்பாடமாகத் தமிழும் ஆங்கிலமும் கற்றார். ஏழாம் வயதைக் ‘காசு’ இன்னும் எய்தவில்லை. இவர் தம்பியார் குஞ்சிதபாதத்திற்கு இன்னும் இரண்டாம் வயதும் எய்தவில்லை. அன்னை மீனாட்சியார் இறைவன் திருவடி எய்தினார். ஏற்றமிக்க எதிர்காலம் உடையவர்க்கு இளமைப் பருவத்திலே இத்தகைய டர்ப்பாடுகள் நேருவது இயற்கை போலும்!