உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள் - 2

63

இல்லத் தரசியை இழந்தார் காந்திமதிநாதர். உற்றார் உறவினர் உருகினர். ஆனால், ஏழாண்டுக் காசு, "ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ?" என்னும் ஒளவையார் பொன் மொழியை உரைத்து ஆறுதல் கூறினராம். எத்தகைய தெளிந்த நெஞ்சம்! எத்தகைய கலங்கா உள்ளம்!

நெல்லையில் இருந்த சி. எம். கிழக்குக்கிளைப் பள்ளியில் நான்காம் வகுப்பில் சேர்ந்தார் காசு. அப்பொழுது நான்காம் வகுப்புத் தேர்வு தொடக்கத் தேர்வு என்றும், ஏழாம் வகுப்புத் தேர்வு 'நடுத்தரத் தேர்வு' என்றும், பத்தாம் வகுப்புத் தேர்வு 'பள்ளியிறுதித் தேர்வு' என்றும் பெயர் பெற்று அரசினரால் நடத்தப் பெற்றன. தொடக்கத் தேர்விலும், நடுத்தரத் தேர்விலும் காசு, மாநில முதல்வராகத் தேர்ந்தார். அதனால் எவ்வகுப்புக்கும் சம்பளம் கட்டிப் படிக்கவேண்டியது இல்லாமல் போயிற்று. தேர்ச்சி தந்த பரிசு இது!

தொடக்கத் தேர்விலும், நடுத்தரத் தேர்விலும் மாநில முதன்மை பெற்ற காசு மேற்படிப்பை வயற்காட்டுப் பள்ளியில் சேர்ந்து பயின்றார். அப்பொழுது ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் அரிய தேர்ச்சி காட்டி ஆசிரியர் பாராட்டுக்கு உரியவராக விளங்கினார். ஆயினும் “ஆனைக்கும் அடிசறுக்கும்” என்பதுபோல் பள்ளியிறுதி வகுப்புத் தேர்வில் தோல்வி கண்டார். தோல்விகண்ட ஆண்டில், மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்வில் முதன்மைப் பரிசு பெற்றவர் 'காசு'வே. அடுத்தஆண்டு நிகழ்ந்த அரசினர் தேர்வில் வெற்றி பெற்றார்.

நெல்லை இந்துக் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் சேர்ந்தார் காசு. 1908 ஆம் ஆண்டு நடந்த தேர்வில் மாநில முதல்வரானார். தமிழ்ச்சங்கத் தமிழ்த்தேர்வில் இவரே முதற்பரிசும் பெற்றார்.

காசு' பிள்ளையின் தந்தையார் காந்திமதிநாத பிள்ளை சிவநெறிச் செல்வர்; இறையுறையும் நிறை திருவினர்; வழி பாட்டையே வாழ்வுப் பணியாகக் கொண்டவர். நாள் தவறாமல் திருக்கோயிலுக்குப் போதலைத் தவறாதவர். அடியார்களைப் பேணுதலில் ஆர்வம் மிகக் கொண்டவர். செப்பறைச் சிதம்பர அடிகளாரும், திருப்பதி சார அடிகளும் அவருடன் பெரும்பாலும்