உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

தங்கியிருப்பர். அடிகளார் இருவரும் தமிழிலும் வடமொழியிலும் வளமான புலமையுடையவர்கள். அவர்கள் தொடர்பு இளமைப் பருவத்திலேயே காசுக்கு வாய்த்தது திருவருட் செயலேயாகும்.

காசு தமிழ் இலக்கண நூல்களை முறையே அவர்களிடம் பாடம் கேட்டார். சமய நூல்களையும் பாடம் கேட்டார். ஒருமுறை கேட்ட பாடம் மறுமுறை ஓதாமலே மனத்தில் தங்கும் திறம் வாய்த்திருந்தார். ஆகலின் சிறுப் பெரியாராகத் திகழ்ந்தார் காசு. செப்பறைத் திருமடம் சென்று சிவதீக்கையும் பெற்றுக் கொண்டார். இளம் பெரியார் தாமே காசு!

றை வழிபாட்டில் மிக ஈடுபாடு கொண்டார் காசு. விளையாடும் எண்ணம் என்றும் ஏற்பட்டது இல்லை. ஓரொரு வேளை ஏற்பட்டு விளையாடச் சென்றாலும் தோழர்கள் இவரைச் சேர்த்துக் கொள்ளாது 'பூசைப் பிள்ளை' எனத் தள்ளிவிடுவர். அதற்காக இவர் வருந்துவதும் இல்லை.

உயர் வகுப்பில் படிக்கும்போது காசு நெல்லையில் 'சைவ சித்தாந்த சங்கத்தை'த் தோற்றுவித்தார். ஞாயிறுதோறும் அச் சங்கம் கூடும். அரிய தலைப்புகளில் சொற்பொழிவு நடத்தும்; ஆராய்ச்சியும் செய்யும். அச் சங்கத்தின் தலைவர்காசுவே ஆவர்.

சைவசித்தாந்த சங்க உறுப்பினர் ஒத்த வயதினரே எனினும் ஒருவரை ஒருவர், "அவர்கள் இவர்கள்" என்றே அழைக்க வேண்டும் என்றும், காபி குடிக்கக் கூடாது என்றும், நாடகம் பார்த்தல் ஆகாது என்றும், கடைப்பிடியாகக் கொண்டனர். குடுமித் தலையராகவும் இருந்தனர். இளம் பருவத்திலேயே இத்தகைய கட்டுப்பாடுகளை அமைத்துக் கொள்வது எதிர்கால உயர்வுக்கு வாய்ப்பு அல்லவா!

நெல்லையில் கல்வியை முடித்த காசு சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை வகுப்பில் (பி.ஏ.) சேர்ந்தார். அவ் வகுப்பில், மாநில முதல்வராகத் தேர்ச்சி பெற்றார். அதனால் பவர்மூர்கெட் என்னும் ஆங்கிலப் பெருமகனார் தமிழ் ஆராய்ச்சிக்கு என அமைத்துள்ள பரிசு காசுவுக்குக் கிடைத்தது. அப் பரிசு வாய்ப்பால், 1913 ஆம் ஆண்டில் ஆங்கிலத்திலும், 1914 ஆம் ஆண்டில் தமிழிலும் இவர் முதல்வராகத் தேர்ச்சியடைந்து இரண்டு மொழிகளிலும் முதுகலைப் பட்டம் (எம்.ஏ.) பெற்றார்.