உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள் - 2

65

அடுத்த ஆண்டில் தத்துவக் கலையை எடுத்துப் பயில முயன்றார்.ஆனால், இரண்டு பாடங்களில் தேறியவர் மூன்றாவது பாடத்திற்குப் போதல் கூடாது என்றொரு விதி இருந்தமையால் அதனை விடுத்துச் சட்டக் கல்லூரியில் சேர்ந்து பி.எல். பட்டம் பெற்றார்.

எம்.எல் பட்டத் தேர்வுக்குப் பணமும் கட்டிவிட்டார். தேர்வுக்கு நாற்பத்தைந்து நாள்களே இருந்தன. இவர் எடுத்துக் கொண்டதோ 'சொத்துரிமைச் சட்டம்' என்பது. அது மிக உழைத்துப் படிக்க வேண்டிய பாடம். ஆயினும் நாற்பத்தைந்து நாள்களிலேயே தெளிவாகக் கற்றுத் தேர்ச்சியும் பெற்றார்.

நெல்லையிலே சைவசித்தாந்த சங்கம் அமைத்த காசு, சென்னையிலே பயிலும்போது 'நண்பர் சங்கம்' என ஒரு சங்கத்தை உண்டாக்கினார். அதன் தலைவர் இவரே. மற்றை உறுப்பினர் மூவர். அவருள் ஒருவர் சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை ஆவர். 'நான்கு பேர் போன வழி நல்லவழி' என்று பாராட்டுமாறு நண்பர் சங்கம் பயனுற நடைபெற்றது.

பலரும் எட்டமுடியாப் பட்டங்களையெல்லாம் பெற்ற காசு நெல்லைக்கு வந்தார். திருமணப் பேச்சு எழுந்தது; தொடர்ந்தது; நிறைவேறவும் செய்தது. திருநெல்வேலி நெல்லை நாயகம் பிள்ளை என்பார் திருமகளார் பிரமும்அமாள் தமிழ்க் காசுவின் தகுதி வாய்ந்த மனைக்கிழத்தி ஆயினார்.

"பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை" என்பது பொய்யா மொழி. ஆகலின் வாழ்வுக்கு இன்றியமையாத பொருள் ஈட்டுதற்கு ஒரு வேலை வேண்டுமே! வேலை தேடுவது அடுத்த கடமை ஆயிற்று.

சட்டத் தேர்வில் வெற்றி கொண்ட காசு வழக்கறிஞர் தொழிலை விரும்பினார் அல்லர். ஆசிரியத் தொழிலை விரும்பினார். ஆம்! சட்டக் கல்லூரியில் கற்பிப்பவரும் ஆசிரியர் தாமே! அப் பணியை விரும்பினார். நீதிபதி சேசகிரி ஐயர் என்பார் துணையால் சட்டக் கல்லூரி ஆசிரியர் ஆனார். பேராசிரியர் ஆதற்கு உரிய தகுதி காசுவுக்கு இருந்தது. நீதிக் கட்சித் தலைவர் சர். பி.டி. தியாகராசச் செட்டியார் முயற்சியால் அவ்வாய்ப்புக்