உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள் - 2

67

'திருவள்ளுவர் கழகம்' என ஒரு கழகத்தைத் தோற்றுவித்தார். அதன் தலைவராக இருந்து அரிய பணி செய்தார். எப்பணி செய்தாலும் எங்கே சென்றாலும் செந்தமிழும் சிவநெறியும் பேராசிரியர் காசுவுடன் ஒன்றுபட்டே நின்றன.

1927 இல் ஒரு புதிய சட்டம் வந்தது. சட்டத்துறைத் தலைவராக சர். சி. பி. இராமசாமி ஐயர் அமர்ந்தார். சட்டக் கல்லூரிக்கு நிலையான பேராசிரியரோ விரிவுரையாளரோ வேண்டுவதில்லை. அவ்வப்போது தக்கவர்களை அமர்த்திக் கொள்ளலாம் எனப் புதியதோர் ஆணை பிறப்பித்தார். அவ்வாணையால் இவர் பதவி விலகி வரும் கட்டாயம் உண்டாயிற்று.

சட்டக் கல்லூரிப் பணியில் இருந்து விலகிய பேராசிரியர், நெல்லைக்கு வந்தார். பொதுப்பணியும், தமிழ்ப்பணியும் அவரைப் போட்டி போட்டுக்கொண்டு ஆட்படுத்தின. அப்போது வெளிப்பட்ட நூல் "இலக்கிய வரலாறு" ஆகும்.

1929-30இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியராக இருந்து பணிபுரிந்தார். 1932இல் நெல்லை நகராட்சி மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார். அதன்பின் நெல்லையப்பர்கோயில் அறங்காவலராக விளங்கினார். இவர் காலத்தேதான் தேவாரப் பாடசாலை, வேதாகமப் பாடசாலை என இரண்டு பாடசாலைகளைக் கோயிலில் தோற்றுவித்தார். கோயிலில் பல நல்ல திட்டங்களை உருப்படுத்தினார்.

1934ஆம் ஆண்டில் திருநெல்வேலியில் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் தோன்றியது. அதன் தலைவராகப் பேராசிரியர் கா. சு.பிள்ளையையே தேர்ந்தெடுத்தனர். நான்கு ஆண்டுகள் தமிழ்ச் சங்கத் தலைவராக விளங்கிப் பலரும் பாராட்டும் பணிகள் புரிந்தார். அதன் பின்னர்க் காஞ்சி மாநகர் சென்று சிலகாலம் தங்கினார். அக்காலத்தில் "பழந்தமிழ் நாகரிகம் அல்லது பொருளதிகாரக் கருத்து" என்னும் நூலையும் "வான நூல்" என்னும் நூலையும் படைத்தார். அதன் பின்னர் சென்னைக்குச் சென்றார்.

பேராசிரியர் சென்னையில் இருந்தபோது அண்ணாமலை அரசர் திருப்பார்வை மீண்டும் கிடைத்தது. பண்டிதமணி கதிரேசச் செட்டியார் அவர்களும் துணை நின்றனர்.அதனால் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மீண்டும் பேராசிரியப் பதவியைப் பெற்றார்.