உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள் - 2

69

நூல்கள், கதை நூல்கள், கலை நூல்கள்,பதிப்பு நூல்கள், மொழி பெயர்ப்பு நூல்கள். ஆங்கில நூல்கள், சட்ட நூல்கள், கட்டுரைகள் என்னும் பல்வேறு தலைப்புகளில் நாற்பதுக்கு மேற்பட்ட நூல்கள் தமிழுலகுக்குக் காசு வழங்கிய அழியாச் செல்வங்களாகும்.

பேராசிரியர் காசு அவர்கள் இதழாசிரியராகவும் விளங்கினார். 'மணிமாலை' என்பது இவர் நடத்திய திங்கள் இதழ், ஓராண்டே நடைபெற்றது. அதில் வெளிவந்த கட்டுரைகள் எல்லாமும் இவரால் எழுதப்பட்டனவேயாகும். ஒன்பது பகுதிகளாகப் பிரித்து ஒன்பது துறைகளில் ஒருவரே கட்டுரை எழுதுவது எத்தகைய அரிய செயல்! அச் செயலைச் செய்தார் பெரியார் காசு!

செயற்கு அரிய செயல்களைச் செய்த பெருமக்கள் பெயரையும், அவர்கள் செயலையும் எழுதிக் கல்நடுவதும், திருவுருவச் சிலை படைப்பதும் பழங்காலம் தொட்டுவரும் பழக்கமாகும். அதனை உணர்ந்த கழக ஆட்சியாளர் அவர்கள், கா. சு. பிள்ளைக்கு நடுகல் அமைத்தல் தம் கடமை என முயன்றார். நெல்லை நகராட்சியின் இசைவுடன் நெல்லைச் சந்திப்பு வெற்றி வளைவின் அருகில் உள்ள பூங்காவில் நடுகல் நிலைபெறுத்தப் பெற்றது. திவான்பகதூர் ஆவுடையப்ப பிள்ளை அவர்களும், கழகத் தலைவர் சிதம்பரம் பிள்ளை அவர்களும் இத் திருப்பணியில் பெரும்பங்கு கொண்டு கடமை ஆற்றினர். அமைச்சர் திரு. மீ. பக்தவத்சலம் அவர்கள் நடுகல்லினை நாட்டி மாலை சூட்டினார். பல்வேறு சங்கங்களின் சார்பில் பாராட்டுரைகள் வழங்கப்பெற்றன.

நடுகல்லில் பொறித்துள்ள செய்தி பேராசிரியர் கா.சு. பிள்ளை அவர்களின் வாழ்க்கையை ஓவியமெனத் தீட்டிக் காட்டுவதால் அது அவ்வாறே குறிக்கப் பெறுகிறது:

இந்நடுகல்

நுண்மாண் நுழைபுலச் செம்மல்

பல்கலைப் புலவர் வழக்குரைஞர் (அட்வகேட்)

கா.சுப்பிரமணிய பிள்ளை

5-11-1888-ல் திருநெல்வேலியில்

காந்திமதி நாதபிள்ளை (பி.ஏ.)க்கும் மீனாட்சியம்மைக்கும் திருமகனாகப் பிறந்து;