உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள் - 2

75

அதன் நயங்களை நாளும் பரப்பிய நாவலர் சேதுப் பிள்ளையைச் 'சொல்லின் செல்வர்' என்று நாடு அழைத்தது தக்கதேயாம்.

நெல் வயல்கள் வேலியாக அமைந்த பேரூர் திருநெல்வேலி. அதனை அடுத்துக் கீழ் பால் திசையில் செப்பறை என்றோர் ஊர் உண்டு. அவ்வூர்க்கு வடபால் அமைந்தது இராசவல்லிபுரம். அவ்வூரில் இருந்த செல்வர் பிறவிப் பெருமாள் பிள்ளை என்பார். அவர் தம் இனிய மனைவியார் சொர்ணத்தம்மாள் என்பார். இவர்கள் உற்றாரும் உறவும் உவந்து பாராட்ட இனிய இல்லறம் நடத்தினர்.ஒருவர் பின் ஒருவராக ஒன்பது மக்களைப் பெற்றும் ஒருவரும் தங்காமல் ஒழிந்தனர். பத்தாவதாகப் பிறந்த திருமகள் ஒருத்தியே குடிக்கு விளக்காக அமைந்தாள்.

ஆண்பிள்ளை ஒன்று வேண்டும் என்று ஆவல் மிகக் கொண்டனர். தொடர்ந்து ஐந்தாண்டுகள் இராமேசுவரம் சென்று சேதுக் கடலில் நீராடினர். அதன் பின்னர்த் திருவருளால் பிறந்த செல்வப் பிள்ளையே நம் சேதுப்பிள்ளை. சேதுக் குழந்தை பிறந்த நாள் 2-3-1896 ஆகும்.

சேது ஐந்தாம் வயதில் திண்ணைப் பள்ளியில் சேர்ந்தார். பத்தாம் வயதில் திண்ணைப் பள்ளிப் படிப்பை முடித்தார். அந் நாளிலேயே அங்கிருந்த செப்பறைத் திருமடத் தலைவர் அருணாசல தேசிகரிடம் மூதுரை, நல்வழி, நன்னெறி முதலாய நூல்களைப் பாடங் கேட்டார். சேதுவின் மனப்பாடத் திறத்தையும் சொல்லின் அழகையும் உணர்ந்த செப்பறை அடிகள், சிவஞான மாபாடியத்தில் சில பகுதிகளைக் குறித்துத் தந்து ஒப்பிக்கச் செய்தார். தவறாது ஒப்பிக்கும் சேதுவைத் தட்டித்தந்து பாராட்டினார்."நீ பின்னாளில் பெரிய நாவலனாக விளங்குவாய்" என்று வாழ்த்தினார்.

சேதுவின் தொடக்கக் கல்வி முடிந்ததும் பாளையங் கோட்டையில் இருந்த சேவியர் உயர்பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். அவர் படிப்பில் ஆர்வம் காட்டியது போலவே விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்டினார். உடன் பயின்ற மாணவர்கள் சேதுவை "இரும்பு மனிதன்" என்று பாராட்டுமாறு உடல் வலிமை வாய்த்திருந்தார்.

ஏழாம் வகுப்புப் படிக்கும்போது சேதுவுக்கு நல்லொழுக்கப் பரிசாகத் திருக்குறள் நூல் கிடைத்தது. விடு முறையில் அதனை ஊருக்குக் கொண்டு சென்ற சேது, தம் பெற்றோர்க்கு அதனைக் காட்டி மகிழ்ந்தார். அப்பொழுது அவர்கள் "செப்பறை அடிகள் திருவடிகளில் வைத்து அவர் வாழ்த்துடன் பெற்றுக் கொள்க”