உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள் - 2

77

நிலைக்கும் வண்ணம், அன்னையார் சில நாட்களில் உயிர் துறந்தார். இளைய சேதுவும் முதிய தந்தையும் ஆற்ற முடியாத் துயருக்கு ஆட்பட்டனர்.

கல்வியில் தேர்ச்சி காட்டிய சேதுவைக் கலைப் பட்டம் பெறச் செய்தல் வேண்டுமெனத் தந்தையார் கருதினார். அதனால் நெல்லை இந்துக் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் சேர்த்தார். தமிழில் தேர்ந்த சேது ஆங்குள்ளோர் உள்ளங் கவர வளர்ந்தார். தமிழ் மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார். தமிழ்ப் பேச்சப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் முதல்வராக விளங்கியதுடன், ஆங்கிலக் கட்டுரைப் போட்டியிலும் அவரே பரிசைத் தட்டிக்கொண்டார். அதனால் நல்லாசிரியர் பாராட்டுக்கும் மாணவர் நன்மதிப்புக்கு உரியவராக விளங்கினார்.

இடைநிலைக் கல்வியில் தேர்ந்த சேது, சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் ளங்கலை வகுப்பில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார். அவர்க்கு விருப்பப் பாடமாக வரலாறும் பொருளாதாரமும் அமைந்தன. தமிழ்க் கல்வி இவர் பாடத் திட்டத்தில் இல்லாமல் இருந்தது. ஆனால், இலக்கிய மன்றங்களின் சார்பாகத் தமிழ்க் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி ஆகியவை நடத்தப் பெற்றன. பேச்சுப் போட்டியில் முதல்வராக வந்தார் சேது. அவர் நாவன்மையைக் கல்லூரி முதல்வர் அறிந்து கொள்ள அது நல்ல வாய்ப்பு ஆயிற்று. கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் திருமணம் செல்வக்கேசவராய முதலியார் அன்பைப் பெறுவதற்கும் அரிய வாய்ப்பு ஆயிற்று.

பச்சையப்பன் கல்லூரி முதல்வர் 'உரோலோ துரை' என்பவர். அவர் சேதுவின் சொற்பொழிவைக் கேட்ட மறுநாள் சேதுவைத் தனியே அழைத்துப் பாராட்டினார். “அடுத்த ஆண்டு நீ நம் கல்லூரித் தமிழாசிரியராக இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என்று தம் விருப்பத்தையும் கூறினார். அவர் வாக்குத் தந்தபடியே சேதுவுக்குத் தமிழாசிரியர் பணி கிடைத்தது. ஆயினும் சட்டக்கலை பயில வேண்டும் என்னும் ஆர்வமும் அவருக்கு இருந்தது. அதனை உணர்ந்தார் கல்லூரி முதல்வர். கல்லூரியில் தமிழாசிரியப் பணி செய்துகொண்டு சட்டக் கல்லூரியில் பயிலவும் வாய்ப்புத் தந்தார்! ஒரு பக்கம் ஆசிரிய நிலை! இன்னொரு பக்கம் மாணவர் நிலை! சேதுவுக்கு வாய்த்த தனி வாய்ப்பு அல்லவா!