உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

சட்டப்படிப்பை முடித்த சேது நெல்லைக்கு வந்தார். படிப்பு முடிந்ததும் பணிதேடுதலும் மணமகள் தேடுதலும் போட்டி போட்டுக் கொண்டு நடைபெறும் செயல்கள். இதில் பிள்ளைகள் கருத்தைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல் பெற்றோரும் உற்றார் உறவினரும் அக்கறை காட்டுவது உலகியல். அவ்வாறே சேதுவுக்கும் நிகழ்ந்தது.

பெரும்புகழ்ச் செல்வர் வடமலையப்ப பிள்ளையன் வழியில் வந்த நெல்லையப்ப பிள்ளையன் என்பாரின் திருமகளார் ஆழ்வார் சானகி என்பார் சேதுவின் மனைவி ஆனார்! சேதுவுக்கும் சானகிக்கும் அமைந்த பெயர்ப் பொருத்தம் பெரும் பொருத்தம் அல்லவா!

வழக்கறிஞர் சேது சென்னைக்குச் சென்றார். அங்கே புகழ் வாய்ந்த வழக்கறிஞராக விளங்கிய முத்தையா முதலியார் அவர்களிடம் பயிற்சியாளராக அமர்ந்து ஈராண்டுகள் பணி புரிந்தார். தொழில் தேர்ச்சியில் நம்பிக்கை உண்டாகியமையால் தாமே தனித்து வழக்கறிஞர் தொழில் நடத்த முடிவு செய்து கொண்டு நெல்லைக்கு வந்தார்.

நெல்லையில் வழக்கறிஞர் தொழில் செய்ய வந்தாரா? வண்டமிழை வளர்க்க வந்தாரா? சொல்லின் செல்வர் இரண்டாவதையே இனிது செய்தார். தீந்தமிழ் கொழிக்கும் திருநெல்வேலியின் திக்கெல்லாம்-தெருவெல்லாம்-தேன் மழை பொழிந்தார். 'தமிழ் என்பது இனிமை' என அகராதியும் நிகண்டும் தரும் பொருளைத் தம் சொல்லாலே நிலை நாட்டினார். சேது செந்தமிழானார்! செந்தமிழ் சேதுவாயிற்று!

நெல்லை மாணவர் சங்கத்தில் திருக்குறள் பற்றி ஓர் அரிய ஆராய்ச்சியுரை நிகழ்த்தினார் சொல்லின் செல்வர். ஆங்கில உரையே நிகழ்ந்த அம் மன்றில் செந்தமிழ் அன்று தொட்டுக் களிநடம் புரியத் தொடங்கியது. அதன் பின் நெல்லையில் 'கம்பன் கழகம்' என ஒரு கழகம் தோன்றியது. அக் கழகத்திலும் சொல்லின் செல்வர் உரையாற்றினார். திருக்குறளிலே முழுதும் தோய்ந்திருந்த சொல்லின் செல்வர் கம்பன் கழகத்தில் பெரியார் சுப்பையா முதலியாரின் கம்பராமாயண உரையைக் கேட்டு அதன் இனிமையில் தோய்ந்தார். அந் நாள் தொட்டுக் கம்பன் காவியத்தில் முழுமையாக ஈடுபட்டார். கம்பன் கழகத்தில் வாரத்திற்கு ஒருமுறை இராமாயண இன்ப மழை பொழிந்தார்

சொல்லின் செல்வர்.