உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

“நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பிற் பிறர்க்குரியா டோடோயா தார்”

என்னும் குறளைக் கூறினார் சேது. 'தோள் தோயா தார்' என்பது 'டோடோயாதார்' எனவரும் இலக்கண முறையை அறிந்து சேது மனப்பாடம் செய்திருந்தமை சங்கர சுப்பிரமணியர்க்கு இன்பம் தந்தது. மிகவும் பாராட்டினார். 'விளையும் பயிர் முளையிலே தெரியும்' என்பது முதுமொழியன்றோ!

ஒரு நாள் இரண்டு பெரியவர்கள் சொல்லின் செல்வருடன் உரையாடுதற்கு வந்தனர். வெயில் கடுமையாக இருந்தமையால் சொல்லின் செல்வர் வைத்திருந்த கூசாவில் நீர் தீர்ந்து போயிற்று. அதன் பின்னர் அவர் நண்பர் ஒருவர் நீர் பருக வந்தார். அவரைப் பார்த்து 'இன்று இரு பெருந்தகையர் வந்தனர்: அதனால் தண்ணீர் தீர்ந்து போயிற்று" என்றார். 'பெருந்தகையர்’ என்பதில் இருபொருள் அடங்கியிருக்கிறது அல்லவா?

ஒரு நாள் சொல்லின் செல்வரை ஓர் அன்பர் கண்ட உரையாடிக் கொண்டிருந்தார். அவர் இளைஞராயினும், அவர் தலை மழுக்கையாக இருந்தது. அங்கிருந்த ஆராய்ச்சி மாணவர் ஒருவரிடம், "இவர் என் தலையாய நண்பர்களுள் ஒருவர்,” என்றார். இவர் தலைபோல அவர் தலையும் மழுக்கையாக இருந்ததைக் கண்ட ஆராய்ச்சி மாணவர் சொல்லழகைச் சுவைத்து மகிழ்ந்தார்.

சொல்லின் செல்வர் ஒரு முறை திருவனந்த புரத்திற்குச் சென்றார். அப்பொழுது 'புனலூர்' என்னும் ஊரை அடுத்து வண்டி செல்லும் போது, அப் பெயரின் அருமையை உடன் வந்தவர்களிடம் உரைத்து மகிழ்ந்தார். வண்டி நின்று அங்கே நீர் பிடித்துக் கொண்டது. அப் பொழுது, "புனலூர் வந்தவுடன் புகை வண்டிக்கும் புனல் குடிக்க வேண்டுமென்ற உணர்வு வந்துவிட்டது!" என்றார்.

சொல்லின் செல்வர் எதுகை மோனை அமைய உரையாற்று தலும் எழுதுதலும் கைவரப் பெற்றவர். “ஊரும் பேரும்”, “சேரனும் கீரனும்","கன்னனும் கும்ப கன்னனும்" "நல்லமரமும் நச்சு மரமும்" "வேலும் வில்லும்" என இவ்வாறே நூல் தலைப்பு, கட்டுரைத் தலைப்பு ஆகியவற்றை அமைப்பர்.