உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

கட்டாயமன்றோ! விளைநிலம் பண்படாக்கால், உர ஊட்டம் நீர்வளம் பெறாக்கால் பயிரூட்டம் உண்டோ? விளைவு ஈட்டம் உண்டோ? பெண்டிரைப் பேணாமை நாடு பேணாமையே! வீடு பேணுவாரைப் பேணாக்கால் அவ்வீடுகளின் கூட்டமாம் நாடு பேணப்பட்டதாகுமா?

தாய் வழிபாடு என்கிறோம்! பெண்ணின் பெருமை என்கிறோம்! அம்மை அப்பன் என்கிறோம்! ஆனால் பெண் பிள்ளைப் பிறவிக்கும் ஆண்பிள்ளைப் பிறவிக்கும் பிறப்பு வேளையிலேயே வேற்றுமை காட்டப்படுகின்றதே! குரவையிட்டுக் கொண்டாடப்படுகிறது ஆண் மகவின் வரவு! பெண் மகவு ஊமைப் பிறப்பாக அமைகின்றது. ஆண்பிறப்பு இனிப்பில் தவழ்கின்றது. பெண்பிறப்பு வாய்ச் சொல்லுக்கும் வறுமைப் படுகின்றது.

பெண் எவ்வகையில் தாழ்வு?

அன்பின் பிறப்பு; அருளின் சுரப்பு; அழகின் இருப்பு; இறைமையின் உறைப்பு! இப்பெண்மையில் காணும் கேடென்னை? ஆணினும் படும் கேடென்னை?

பெண் என்ன நிலமா புலமா, நகையா நட்டா,ஆடா மாடா, பொட்டா பூவா? உயிர்! உயிர்! உயிர்! பண்பின் கொள்கலமாம் பரிவுயில்! ஓடி ஓடி உதவும் உயிர்! உருகி உருகி உதவும் உயிர்! அவ்வுயிரை ஆண்மைச் செருக்குப் படுத்தியுள் படுத்திவரும் பாடு ஒன்றோ? இரண்டோ?

'ஒத்த கிழவனும் கிழத்தியும்' என்றும் என்ன? பெண்ணிற் பெருந்தக்கதில்' என்றும் என்ன? தாயிற் சிறந்தொருகோயிலும் இல்லை' என்றும் என்ன? திருமகளாய், கலைமகளாய், மலை மகளாய் வழிபட்டும் என்ன? நிலமகள் நீர்மகள் வீரமகள் வெற்றி மகள் என்றும் என்ன? பெண்ணுக்குப் பெருமையுண்டோ?

ஒளவையாரை அறிவார் பெண்ணினம் அறிவில் தாழ்வென அறைவரோ? காக்கைபாடினியாரை அறிவார் பெண்ணினம் புலமையில் தாழ்ந்ததெனப்புகல்வரோ? காரைக்காலம்மை யாரையும் ஆண்டாளாரையும் உணர்வார் பெண்டிர் இறைமைப் பெருக்கை எளிதில் எடை போடுவரோ? புறப்பாடலை ஆய்வார் முதுகுடிப்பெண்டிர் வீரத்தை எண்மையாய் எண்ணுவரோ?