உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. எழுவாய்

பிறவிக்கு நோக்கம் உண்டு; அந்நோக்கம் துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமும் ஆம்!

துன்பநீக்கம் வேண்டும் என்றும், இன்ப ஆக்கம் வேண்டும் என்றும் எண்ணா உயிரி ஒன்று உண்டோ? இல்லையாம்!

துன்ப நீக்கம் இன்ப ஆக்கம் என்பவை, தன்னளவில் நிற்பதில் உலகுக்குப் பயன் யாது? தன்னளவு நோக்கம் என்பது தன்னலத்து நோக்காகவே அமையும்.

தன்னளவில் அரும்பும் துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமும், படிப்படியே வளர்ந்து வளர்ந்து உலகாக விரிவதிலேயே பிறவிநோக்கு நிறைவேறுகின்றதாம். அப் பிறவி நோக்கின் கட்டளைத் தொடரே 'வாழ்வாங்குவாழ்தல்' என்பதாம்.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.”

என்பது பொய்யாமொழி.

'வாழ்வாங்கு வாழப் பயிற்றும் கருவியொன்றுண்டோ?' எனின் 'ஆம்' 'கருவியுண்டு' என்பதே விடையாம்.

'அக்கருவி யாது? எனின், அக்கருவி நூற்கருவி என்க. அந்நூற் கருவியுள்ளும் தலையாயது, வாழ்வுநூற்கருவி என்க.

பொது

அவ்வாழ்வு நூற்கருவியுள்ளும் தலையாயது, நலத்தொண்டுக்கே தம்மை ஆட்படுத்திக்கொண்ட சான்றோர்தம் வாழ்வு நூற்கருவி என்க.

அந் நூற்கருவியுள்ளும் தலைநிற்பது, அச்சான்றோரா லேயே எழுதப்பட்ட வாழ்வியல் நூற்கருவி என்க!