உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. தமிழ்க் கல்வி

தமிழ்த் தொண்டில் ஒருவர் தலைப்பட வேண்டுமாயின் முதற்கண் அவர்க்குத் தமிழறிவு வேண்டும்: தமிழ்ப்பற்றுமை வேண்டும். தமிழை வளர்க்கும் காதல் வேண்டும்; காத்தோம்பும் கடப்பாடு உருத்தெழுந்து ஒலி செய்ய வேண்டும். இல்லாக்கால் தொண்டு வாய்க்குமோ?

மழலைக்கல்வி

தமிழ்க்கல்வி திரு.வி.கவுக்கு எங்கே தொடங்கியது? எப்படித் தொடங்கியது? 'மழலையர் பள்ளி' என்னும் பெயரால் தமிழ் வாழ்வையும் தமிழர் வாழ்வையும் கெடுத்துவரும் புற்றீசற் பள்ளிகள் இக்கால் எங்கெங்கும் புகுந்துள்ளனவே? கூத்தாடுகின்றனவே! திரு.வி.க. பயின்ற மழலையர்பள்ளி எது? ஆசிரியர் எவர்? அவர் பயின்ற கல்வி என்ன? அவரே கூறுகிறார். “கடையின் தாழ்வாரம் பள்ளியாயிற்று. தந்தையாரே ஆசிரியரானார். பள்ளிக்கூடத்தின் முன்னே காலையிலும் மாலையிலும் மர நிழல் வாசஞ்செய்யும். தமிழ் எழுத்துக்களை மணலில் எழுதி எழுதித் தந்தையார் தமையனார்க்குப் போதிப்பார். அதை யான் விளையாட்டாகப் பார்ப்பேன். சிலசமயம், யானும் அ-ஆ' என்று சொல்வேன் எழுத்துப் பயிற்சிக்குப் பின்னே அண்ணார்க்கு அரிச்சுவடி, ஆத்திசூடி, கொன்றைவேந்தன், உலகநீதி, வாக்குண்டாம் முதலி யனவும் நெல்லிலக்கம், பொன்னிலக்கம், எண்சுவடி முதலியனவும் கற்பிக்கப்பட்டன. நாடோறும் மாலைவேளையில் பெரியசாமியால் பாடங்கள் ஒப்புவிக்கப்படும், சின்னசாமி சிலசமயம் பெரியசாமி யுடன் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருப்பன்; சில சமயம் இடையில் ஓடி விடுவன்; சில சமயம் அவ்விடஞ் செல்லாமலே இருந்துவிடுவன். அவனைக் கேட்பாரில்லை "தமையனார் பாடங்களை ஒப்பிக்குங்கால், அவைகள் பெரிதும் என் சிந்தையில் படியும். படித்ததைப்பகலில் சொல்லிச் சொல்லித் திரிவேன். உரத்த குரலில் சொல்லிக் கொண்டே ஓடுவேன்; ஆடுவேன். சிலநாட்கடந்து எனக்கும் முறையான போதனை