உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

125

"யான் கற்றன சில; கேட்டனசில; இரண்டும் எனக்குச் செல்வமாயின. பொருட்செல்வம் பெறாத எனக்குக் கல்விச் செல்வம் சிறிது வாய்த்தது. இச்செல்வத்தை யான் பெறாதிருப் பனேல் என் வாழ்வு என்ன வாகியிருக்கும்?

கல்விச் செல்வம் என்னைத் தொண்டனாக்கியது; தமிழ்த் தொண்டனாக்கியது."

"யான் பெற்ற கல்விச் செல்வம் பலமொழிப் பொருள் களினின்றும் திரண்டது. பலமொழிக் கருத்துக்கள் என் உள்ளத்தில் ஊறாத முன்னர் எனக்குத் தமிழ்க்காவியங்கள் வழங்கிய காட்சி ஒருவிதம்; ஊறிய பின்னர் வழங்கிய காட்சி வேறுவிதம். இவ் வேற்றுமைக்கு ஈண்டு ஒன்றை எடுத்துக்காட்ட விரும்புகிறேன்."

"பெரியபுராணத்துக்கு இளமையில் ஒரு குறிப்புரை கண்டேன்; அரசியல் உலகில் ஈடுபட்ட பின்னர் ஒரு குறிப்புரை கண்டேன் அதற்கும் இதற்கும் உற்றுள்ள வேற்றுமை வெள்ளிடை மலையென விளங்கா நிற்கிறது.

"ஆள் ஒருவன். வேற்றுமையுறுவானேன்? அக்கால மனோ நிலைவேறு; இக்கால மனோநிலைவேறு; வேறுபட்ட மனோ நிலை கருத்தில் வேற்றுமையுறுத்துவது இயல்பு. அருச்சுனன் ஒருவன். அவன் கீதை கேட்பதற்கு முன்னே எப்படியிருந்தான். பின்னே எப்படியானான்? கல்வி கேள்வியாலும் சேர்க்கையாலும் இன்ன பிறவற்றாலும் மனோநிலை மாண்டு மாண்டு புத்துயிர் பெறும். ஒரே பிறவியில் மனிதன் எத்தனையோ முறை இறக்கிறான்; எத்தனையோ முறை பிறக்கிறான். இவ்விறப்பும் பிறப்பும் மனிதன் அறிவை விளக்கம் செய்தே செல்லும். இது வெறும் பேச்சன்று; கதையன்று; அநுபவம்"!

"அறிதோறும் அறியாமை கண்டற்று" என்பதற்கும் பல் பிறப்பும் பல இறப்பும்,ஒரோ பிறவியிலே வருவதற்கும் இப் பகுதியினும் வேறு விளக்கம் வேண்டுமோ? இது வெறும் பேச்சன்று; கதையன்று; அநுபவம் (பட்டறிவு) என்பதிலேயுள்ள மும்மை அழுத்தம் என்ன? உறுதிப் பாடேயன்றோ! பள்ளிப்படிப்பை முற்றிலும் முடியாமல் இடைத்தடையுற்ற திரு. வி. க. பல்கலைக் கழகத்தின் பக்கம் கால் வைக்கக் கூடுமோ? கூடாதென்றே கல்வியுலகம் கூறும்! ஆனால் அறிவுலகம் அவ்வாறு கூறுமோ? இயற்கைக்கல்வி

திரு.வி.க. பயின்றது தனியொரு பல்கலைக்கழகம். அஃது இயற்கைப் பல்கலைக் கழகம்! உலகெலாம் விளங்கும் திறந்தவெளிப்