உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

தமிழ்நாட்டிற்கு இன்றியமையாது வேண்டற்பாலதே; ஆனால், அவைகளிலுள்ள மொழியோ அவைகளைத் தொடவும் மனத்தைத் தூண்டுவதில்லை; என் செய்வது! ஆட்சியை ஆக்ஷி யாகவும், காட்சியைக் காக்ஷி யாகவும் செலவைச் சில வாகவும் நாகரிகத்தை 'நாகரீக' மாகவும் காணும் போது தமிழுணர்ந்த எவருள்ளந் தான் வருந்தாது? பாஷையாலென்ன? எப்படி எழுதினாலென்ன? என்று சில அறிஞர் கூறுகிறார். இக் கூற்றுத் தமிழ்மொழியை மாத்திரம் பற்றி எழுவதா? ஆங்கில மொழியைப் பற்றியும் எழுவதா என்று அவ்வறிஞரைக் கேட்கிறோம். ஆங்கில நினைவு தோன்றும் போது எழும் மொழி வனப்பு, தமிழ்நினைவு தோன்றும் போது ஏன் எழுவதில்லை? தமிழ்த் தாயை எவ்வாறாவது குலைக்கலாம்; ஆங்கிலத்தாயை ஓம்பினால் போதும் என்னும் எண்ணம் இந்நாட்டார்க்கு உதித்திருக்கிறது போலும்! ஈன்ற தாய் பட்டினி! மற்றத்தாய்க்கு நல்லுணவு! என்னே காலத்தின் கோலம்! மொழியும் விடுதலையும்

"தமிழ்மொழியினிடத்துப் பற்றின்றி நாட்டுக்கு உரிமை பெற முயல்வது கானற் சலத்தை நாடி ஓடினவன் கதையாக முடியும். உரிமைக்காக மிகப்பரிந்து உழைக்கும் காங்கிரசாவது தமிழ்வளத்தைக் கருதி உழைக்கிறதா? ஹிந்தி பாஷையை வளர்ப்பதைப் பற்றி நாம் குறைகூற வில்லை. பாரத நாட்டுக்கே பொதுமொழியாக ஹிந்தி நிலவ வேண்டுமென்று நாமுங் கூறுகிறோம். இதனால் தாய்மொழியாகிய தமிழைக் கொலை செய்ய வேண்டுமென்று எவரும் கூறார். மயிலாப்பூரில் ஒரு ஹிந்தி கல்லூரி திறக்கப்பட்டது. அதன்திறப்பு விழா அழைப்பு நமக்கு வந்தது. அதன் கண் ஒருபக்கம் ஆங்கிலமும் மற்றொரு பக்கம் ஹிந்தியும் பொலிவதைக் கண்டோம்; தமிழும் ஹிந்தியும் ஏன் அவ்வழைப்புத்தாளில் திகழலாகாது? என்று எண்ணினேம். தமிழ்நாட்டில் காங்கிரஸ்காரர் இனியாவது தமிழ்மொழி வளர்ச் சிக்கென உழைக்க முன் வருவரோ என்று கூவி அடங்குகிறோம்." தமிழாசிரியர்

"தமிழ்ப்பண்டிதர்கள் ஒன்றுபட்டுத் தமிழை வளர்ப்பது இந்த யுகத்தில் இல்லை, காரணங்கள் கூறின் மிக விரியும். தற்கால நாகரிக உணர்வுடைய சில தமிழ்மக்கள் தமிழ் நாட்டில் வதிகிறார்கள். அவர்கள் ஒன்று கூடித் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆங்காங்கே கழகங்கள் கண்டு உழைப்பார்களாக.