உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

149

சங்ககால மாண்பும், இடைக்கால வீழ்ச்சியும், இக்கால இழிமையும் அவர்தம் உணர்வு மொழிகளில் வெள்ளமாகப் பாய்கின்றன. இடைக்கால இக்கால நிலைபற்றிய செய்திகள் இவை:

தமிழ்த்தாய் நிலைமை

"இடைக்காலம் தமிழ்த்தாய்க்குச் சிறைவாழ்வு வழங்கிற்று. இந்நாளோ அவளுக்குச் சிறையுடன் நோய்களையும் வழங்கி யிருக்கிறது. உணவின்றிச் சிறப்பாகக் காவிய உணவின்றித் தமிழ்த்தாய் மெலிகிறாள்; நலிகிறாள். மெலிவாலும் நலிவாலும் அவளது நரம்பு தளர்ந்து தளர்ந்து செந்நீர் ஓட்டம் குலைந்து கொண்டே போகிறது. செந்நீர் வெந்நீராகிக் கொதிக்கிறது; கொதித்துக் கொதித்து ஆ! ஆ! எத்துணைப் புண்களை, எத்துணைச் சிரங்குகளை, எத்துணைக் கட்டிகளை, எத்துணை உடைவுகளை, எத்துணைப் பிளவுகளைத் தாயினிடம் உண்டு பண்ணியிருக்கிறது. தமிழ்த்தாயின் அழகிய உடல் - செழியமேனி -புண்ணீர் ஒழுகும் புன்தேகமாகிவிட்டது. அவள் உள்ளமோ... தமிழனே! நீ தமிழ்த்தாயின் சேயா? நீ எங்கேயிருந்து விடுதலை விடுதலை என்று முழங்குகிறாய்? என் தாய்முகம் நோக்கு. அவள் எப்படியிருக்கிறாள்? எவ் வழியில் நின்று, எத்துறையில் இறங்கி, அவளை நோயினினின்றும் சிறையினின்றும் விடுதலை செய்யப் போகிறாய்?

அறை கூவல்

'தமிழ்மகனே! விடுதலை விடுதலை என்று வெறுங் கூச்சலிடுவதால் பயன் என்ன? விடுதலை முயற்சி, விடுதலை தருவதாயிருத்தல் வேண்டும், விடுதலை விடுதலை என்று சிறைக் கூடத்தில் நோய்வாய்ப்பட்டுள்ள தமிழ்த்தாயைச் சுற்றிலும் தீயிட்டு எரிப்பது அவள் நோய் போக்கும் மருந்தாகுமா என்பதைக் கவனிக்க. தமிழ் அன்னை இடைக்காலத்தில் சிறைப்பட்டாள்; பின்னே நோய்ப்பட்டாள்; இப்பொழுது விடுதலை என்னும் பெயரால் எரிக்கப்படுகிறாள். 'அந்தோ! நாங்கள் தாய்க்கு எரியா மூட்டுகிறோம்; விடுதலைக்கன்றோ முயல்கிறோம் என்று சில சகோதரர்கள் கருதலாம். சகோதரர்களே! உங்கள் பேச்சில் எழுத்தில் விடுதலை விடுதலை என்னும் ஒலியும் வரியும் இல்லாமல் இல்லை. ஆனால், உங்கள் பேச்சால் எழுத்தால் விளைவ தென்ன?

32