உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

167

தொடர்பையும், தமிழ்மொழிமேல் அவர் கொண்டிருந்த பற்றையும், திருக்குறளைத் தமிழ்வழியே பயில அவர்க்கு எழுந்த வேட்கையையும் விரித்துக்கூறுகிறார். அவற்றைக் கூறுங்கால், இரண்டு குறிப்புகளை முன் வைக்கிறார். ஒன்று தென்னாப் பிரிக்காச் சிறை யநுபவச் செய்தி. மற்றொன்று தூத்துக்குடியில் 12, 10, 27 இல் அளிக்கப்பட்ட வரவேற்பறிக்கைக்கு இறுத்தவிடை:

முன்னது :- (தென்னாப்பிரிக்கப்) "போரில் தமிழ்மக்கள் புரிந்த துணையைப்போல வேறெவ்விந்தியரும் புரியவில்லை. அவர்கட்கு நன்றியறிதல் காட்ட அவர்கள் நூல்களைப் பயில் வேண்டுமென்று நினைத்தேன். அப்படியே அவர்கள் மொழி பயில்வதில் மிக ஊக்கமாக ஒரு திங்கள் கழித்தேன். அம் மொழியைப் பயிலப்பயில அதன் அழகை உணரலானேன். அது மனங்கவரும் ஓர் இனியமொழி. தமிழ் மக்களுள் பண்டை நாளிலும் - இந்நாளிலும் கூட பல அறிஞர் இருந்தனர் - இருக் கின்றனர் என்பது அம்மொழியின் அமைப்பானும் பயிற்சியானும் அறியக் கிடக்கிறது. இந்தியாவில் ஓரினம் ஏற்பட வேண்டுமானால் சென்னை மாகாணத்துக்கு அப்புறமுள்ள வரும் தமிழுணரல் வேண்டும்."

பின்னது: "ஆங்கிலம் பயில்வதற்கு முன்னர்த் தமிழ் மொழி பயிலவேண்டுமென்று யான் பன்முறை பகர்ந்திருக்கிறேன். 1915 ஆம் ஆண்டிலேயே ஆங்கிலத்திலும் தமிழ் மொழியைச் சிறப்பாகக் கொள்ளுமாறு தமிழ்மக்களை வேண்டிக்கொண்டேன். இற்றைக்குப் பத்தாண்டுக்கு முன்னர் இந்தியா முழுவதும் சுற்றிச் சுற்றி அயல்மொழி வாயிலாகப் பிள்ளைகட்குக் கல்வி புகட்டலாகாதென்று கிளர்ச்சி செய்தேன்; தாய்மொழியில் பேசுமாறும் தாய்மொழி நூல்களைப் பயிலுமாறும் மக்கட்கு விண்ணப்பஞ் செய்து கொண்டேன். திருக்குறளைப்பற்றிச் சில செம்மொழிகள் உங்கள் வரவேற்பில் மிளிர்கின்றன. இருபது ஆண்டுகட்கு முன்னரே யான் தமிழ் பயிலத் தொடங்கியதற்குக் காரணம் திருக்குறள் மூலத்தையே நேராகப் படித்தல் வேண்டுமென்று என்னுள்ளத்தெழுந்த அவாவேயாகும். தமிழ் மொழியில் புலமை பெறுவதற்குரிய ஓய்வு எனக்கு ஆண்டவன் அருளினானில்லை. அது குறித்து யான் உறும் வருத்தத்துக்கோர் அளவில்லை. அவரவர் அவரவர்க்குரிய தாய்மொழி வாயிலாகவே கல்விபெறல் வேண்டும். தமிழ்மக்கள் தங்கள் தாய்மொழியாகிய தமிழ்பயில வேண்டுவது அவர்களது இன்றியமையாக் கடமை.