உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

தமிழர் தம்மொழியை ஆங்கிலம் முதலிய மொழிகளைவிட முதன்மையாகக் கருதல் வேண்டும். தமிழ் நாட்டில் ஓரிடத்தில் எனக்கு ஆங்கிலத்தில் வரவேற் பறிக்கை வழங்கப்பட்டது. அதை உடனேயான் மறுத்துரைத்ததை நீங்கள் அறிந்திருக்கலாம்.8”

அடிகளார் உரைத்த 'தாய்மொழி' ச் செய்திகளையும் தமிழ்ச் செய்திகளையும் தொகுத்தும் வகுத்தும் விரித்தும் திரு.வி.க. உரைப்பானேன்? அடிகளார் வாழ்வியல் நயத்தைக் கூறவந்த செய்தியளவோ இதன் அளவு! திரு.வி.க.வின் கொள்கை, கோட்பாடுகளின் அளவும் கடைப்பிடியும் இவையாகலின் பயில எடுத்துரைத்தார். பிறர் பிறர் அடிகளார் பற்றி எழுதிய நூல்களில் இவ் விளக்கங்கள் உண்டோ? நோக்குவார் நோக்கு, நோக்கப்படும் பொருளொடும் ஒன்றியிருக்குமானால் ஊற்றென,ஆறென, வெள்ளமெனப் பெருக்கெடுக்காதோ?

அடிகளார் தமிழ்வாழ்வைத் தமிழ்வாயிலாய் வெளிப்படுத்தக் கிளர்ந்த திரு.வி.க. தமிழ்மக்களை முன்னிறுத்திச் சில முத்துகளைப் பெய்துள்ளார். அப் பெய்வு திரு.வி.க. என்னும் முகில், தமிழ்ப்பயிர் வளப்பயன் வழங்கப்பொழிந்த மழையெனத் திகழ்கின்றதாம்:

"தமிழ்நாட்டில் பிறந்த அடியேன் தமிழ்மொழியில் காந்தியடிகள் வாழ்க்கை நுட்பத்தைச் செப்பப்புகுந்தமையால், காந்தியடிகள் தமிழைப் பற்றியும் தமிழ்மக்களைப் பற்றியும் கொண்ட கருத்துக்களை ஈண்டுப் பொறிக்கும் வாயிலாகத் தமிழ் மக்களை முன்னிலைப்படுத்திச் சில உரைகள் பகரவிழைகிறேன்:

ஆங்கிலம் பயின்ற தமிழ்மக்களிற் பெரும்பான்மையோர் தமிழ்த்தாயை மாசு படர்ந்த துச்சிலில் இருத்தி அவளுக்கு உணவும் உடையும் அளியாது, அவளை வருத்தி, அயல் மாதை நடுவீட்டில் அமர்த்தி, அம் மாதுக்கு நல்லுணவும் உடையும் தந்து, மலர் சூட்டி அவளை வழிபடுதல் எவரும் அறிந்ததொன்று. இது நம்மக்களின் அறிவைப் புலப்படுத்துகிறதா? அறியாமையைப் புலப்படுத்து கிறதா? தமிழ்மக்களே! கேளுங்கள். "தமிழின் தொன்மை என்ன! தமிழ்ப்பாக்களின் வனப்பென்ன? மயிர் சிலிர்க்கின்றது. மிகத் தொன்மைவாய்ந்த ஒரு பெருந்தனி மொழியன்றோ நந்தமிழ்? தமிழனாகப் பிறந்து தமிழ்ச்சுவையுணர்ந்த ஒருவன் வீடுபேற்றையுங் காதலியான். அவனுக்கு வீடுபேறு தமிழ்மொழி இன்பமேயாகும். அவன் மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டில் தமிழனாகப் பிறந்து தமிழ்ச்சுவை மாந்தி இன்புறவே விரும்புவான்.