உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

இளங்குமரனார் தமிழ்வளம் -25

"முதற்பதிப்புத் தலைகாட்டியபோது எதிர்ப்புப் பெரிதும் எழுந்தது; இப்பொழுது எதிர்ப்பு மறைந்துவிட்டதென்று கூறலாம். இந்நூல் வெளிவந்த பின்னைத் தென்னாட்டில் பெண்ணுரிமைக்கெனத் தோன்றிய இயக்கங்கள் பல; சங்கங்கள் பல; முயற்சிகள் பல; மேலுங் கலப்பு மணங்களும் கைம்மையர் மணங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன; இளைஞருள் ஒருவிதப் புத்துணர்வு தோன்றியிருக்கிறது; மூலை முடுக்குகளிலும் பெண்ணின் பெருமை பேசப்படுகிறது. பெண்ணுலகம் விழித்துக் கொண்டது என்று சுருங்கச் சொல்லலாம். இந்நூல், இன்னும் பல நலன்களைச் செய்யும் என்றே நம்புகிறேன்.'

"எனது குறட்காதல், முன்னே 1927ஆம் ஆண்டில் 'பெண்ணின் பெருமை' என்னும் நூலாகத் திரண்டது. இப்பொழுது திருக்குறள் விரிவுரையாக உருக்கொண்டு வருகிறது" எனவரும் திருக்குறள் விரிவுரையின் அணிந்துரைப்பகுதி, 'பெண்ணின் பெருமை திருக்குறளை அடிப்படையாகக் கொண்டெழுந்த ஓர் ஆராய்ச்சி நூல்' என்பதை விளக்கம்.

திருக்குறள் விரிவுரை

திருக்குறள் விரிவுரை எவ்வாறு எழுந்தது? சென்னை இராயப்பேட்டை பாலசுப்பிரமணிய பக்தசனசபையில் நக்கீரர் கழகச் சார்பில் நிகழ்ந்த தமிழ் வகுப்பில் 1915 ஆம் ஆண்டில் திருக்குறள் பாடம் நடத்தினார் திரு.வி.க. திருவல்லிக்கேணி 'தியோசாபிகல்' சங்கக் கிளையில் 1928 ஆம் ஆண்டில் திருக்குறள் வகுப்பு நடத்தினார். முன்னை யிடத்தில் திருக்குறளுக்குக் காலத்துக்கேற்றதோர் உரை காணவேண்டு மென்னும் விருப்பம் எழுந்து, பின்னை யிடத்தில் முதிர்ந்தது. தென்காசித் திருவள்ளுவர் கழகப் பொழிவின்பின் குற்றாலச் சண்பகாடவி உரையாடல் 1936 இல் நிகழ்ந்தது. அது முன்னை வேட்கையை மீதூரச் செய்தது. அந்நாளில் திரு.வி.க. நடத்தி வந்த 'நவசக்தி' முதற்பக்கத்தில் பிறந்து, தமிழ்நூல் உலாக்கொண்டது. இது நூல்வந்த வரலாறு (அணிந்துரை 6, 7).

66

திருக்குறளின் தோற்றுவாய் என்ன? அதனை, விரிவுரையின் தோற்றுவாய் இரு தொடர்களால் படம் பிடித்துக் காட்டுகிறது. "திருவள்ளுவர் என்னும் நினைவு தோன்றும் போதே உலகமும் உடன் தோன்றுகிறது”. “உலகின் எழுத்தோவியம் திருக்குறள்” என்பவை அவை.