உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

செய்யலாம்" என்று வாய் மொழியாணை வழங்கினார் வள்ளுவ வாழ்வார். பின்னே மெதுவாக ஏதேனும் நூல் எழுதியிருக்கிறீர்களா? என வினாவினார். தாம் எழுதிய நூலான 'கௌரீமணி' என்பதைக் கையில் கொண்டு சென்றிருந்த சர்மா. அதனைக் கொடுத்தார்.

நூலைச் சிறிது பார்த்துவிட்டு "தமிழ்ச்சொற்களை இன்னும் அதிகமாகப் பெய்து எழுதினால் நன்றாயிருக்கும்" என்று கூறினார்.

இதனைக் குறிப்பிடும் சாமிநாதர் “அவர் உள்ளக் கிடக்கை இன்னதென்று உணர்ந்துகொண்டேன். கௌரீமணி என்ற அந்த நூலில் வடமொழிச் சொற்களை அதிகமாகப் பகுத்தியிருந்தேன். காரணம் வேறொன்றுமில்லை. எனக்கும் வடமொழியில் பரிச்சயம் உண்டு என்று காட்டிக் கொள்ளவேண்டுமென்ற அகந்தை மனப்பான்மைதான். அந்த நூல்வெளியான போது எனக்குப் பத்தொன்பது வயது" என்கிறார்.

சாமிநாதர் தமிழ்நடை தேசபக்தனில் புகுந்த மூன்றாம் நாளே பாராட்டுக்குரியதாயிற்று. "வடமொழி கலவாத தமிழில் தூய தமிழில் எனக்கு எழுதத்தெரியுமென்பதை முதலியார் தெரிந்து கொண்டார். "இப்படித் தான் எழுதவேண்டும். நமது பத்திரிக்கைக்கு ஏற்ற நடை" என்று கூறி என்னைப் பாராட்டினார் என்கிறார், சாமிநாதர்.

சாமிநாதர் திரு.வி.க. நடையை மட்டும் பற்றினார் அல்லர். திரு.வி.க.வின் சால்பையும் பற்றினார். வழிவந்த தம் குடிவழிப் பண்புடன் இச் சால்பும் செறிய அரசியல் எழுத்தா, மொழி பெயர்ப்பா சாமிநாதர் இணையில்லார் என்னும் பேற்றையும் பெற்றார். "அவரைப் பார்த்தது எந்நாளோ அந்நாளே நான் எழுத்தாளனாகப் பிறந்த நாள்" என்றும், "முதலியாரைக் கண்டேன் ஆட்கொண்டார்; ஆட்பட்டேன்; அவ்வளவுதான் தெரியும்" என்றும் சர்மா கூறுவதிலிருந்தே சான்றாண்மை புலப்படுமன்றோ!

'ஏப்ரல் 1919 அல்லது பஞ்சாப்படுகொலை' என்பதொரு நூல் சர்மா எழுதினார். திரு.வி.க. முகவுரை வழங்கினார். தேசபக்தன் அலுவலகம் இராயப்பேட்டையில் இருந்தது. நூலச்சு பாரிமுனைத் தம்பு செட்டித் தெருவில் நடந்தது. போக்குவரவு வாய்ப்பற்ற அந் நாளில் அம் முகவுரை பிழையின்றி வெளிவருதற்காக அச்சகத்திற்கு மூன்று நான்கு முறை நேரில் வந்தாராம் திரு.வி.க.