உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. தமிழர் சமயம் - பொது

கா.சுப்பிரமணியனார் இயற்றிய நூல்கள் பல திறத்தன; பல வகையின. அவற்றுள், தமிழரையும் அவர் தம் சமயத்தையும் பற்றிய ஆய்வு நூல் 'தமிழர் சமயம்' என்பது.

தமிழைப் பற்றியும், தமிழர் சமயம் பற்றியும் பல நூல்களை இயற்றியுள்ளார் கா.சு. இரண்டையும் ஒப்ப இயைத்துக் காட்டிய நூல் 'தமிழர் சமயம்' என்பதாம்.

1940 இல் 'தமிழர் சமயம்' வெளிவந்தது. அதன் முகவுரை கி.ஆ.பெ.விசுவநாதரால் வரையப்பட்டது.

"கோடையிலே இளைப்பாறிக்கொள்ள இங்கு வந்த எனக்கு இந்நூல் ஒரு குளிர்தருவாயிருந்தது" என்கிறார். பெங்களூர் 25-5- 40 என்பவை இதனை எழுதிய இடத்தையும் நாளையும் காட்டும்.

"இந்நூல் ஆரிய மணல் மேடுகளிற் புதையுண்டு கிடந்த தமிழர் பெருந்தனம் என்றே கூறவேண்டும். இதனைச் சுட்டிக் காட்டியதும் ஒரு தமிழ்க் கா.சு.வேயாகும்" என்பது நூற்றகவும் நூலாசிரியர் தகவும் தெரிவிப்பது! 'பெருந்தனந் தந்தது காசு' எனல் இயற்கை தானே!

"எம்.எல்.பிள்ளை என்று நெல்லை வட்டத்தில் திரு.பிள்ளை அவர்களைக் கூறுவதுண்டு. பிற வட்டங்களில் அவர்களை 'நெல்லைத் தமிழ்ச் சைவர்' எனக் கூறுவர். பண்டிதருலகத்தில் அவர்களைத் 'தமிழ்க் கா.சு.' என மறைவாகக் கூறுவது மரபு. இந்நூலை வெளியிட்டு மூன்றாவது பெயருக்கு முற்றும் பொருத்த மானார்கள் பேராசிரியர் திரு. பிள்ளை அவர்கள்" என்பதனால் தமிழர் சமயச் சிறப்புப் புலப்படும்.

இந்நூல் அச்சிடப்பட்ட பின்னர் தமிழ்ப் பெருமக்கள் சிலர் பார்வைக்குப் படிகள் விடுக்கப்பட்டன. நாவலர் பாரதியார், அறிஞர் தூ.சு. கந்தசாமியார், முதுபெரும்புலவர் வெ.ப. சுப்பிரமணியனார், நாவலர் ந.மு.வேங்கடசாமியார், தமிழவேள்