உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

இனிப் புகழுக்கு இடமாக இருத்தலின் இசையாயிற்று என்பது பிறிதோர் கருத்து. (இசையாவது புகழ்)

இவ்வாறு பலப்பல கூறினும் பண்ணோடு பாடல் பொருந்து தலே இசையாய்ப் பின்னே பிறபிறவற்றைத் தழுவியதெனலாம்.

'அசைத்து இசைகோடலின் அசையே' என்பதால் அசையின் அடித்தளமே இசையாதலால் இப்பொருள் விளக்கமாம்! இசைவளம் பெரிது! அவ்வுலகம் பெரியது! அதிலும் 'தமிழிசை'ச் சிறப்பை என்னென்று சொல்வது?

தேவாரம், நாலாயிரப் பனுவல், திருவாசகம், திருவிசைப்பா, திருப்புகழ் இவற்றில் இயைந்துள்ள இசை வளம் ஒரு பிறப்பில் ஒருவர் ஆய்ந்து காணக் கூடியவோ! வண்ணப் பாடல்கள் பாடிய சிறப்பாலேயே 'வண்ணச் சரபம்' என்றும், வண்ணக் களஞ்சியம் என்றும் புகழ்ப் பெயர் பெற்று உலாக் கொண்ட பெருமக்கள் இருந்த இம் மண்ணிலேதான், தமிழிசையென ஒன்றுண்டா? என்று இசைக் கல்லூரி யாட்சியுடையாரும் வினா எழுப்பும் இழிதகைமை உண்டு! நாட்டுப்பாடல், சித்தர் பாடல்கள், ஏற்றப் பாட்டு, கும்மிப் பாட்டு, தாலாட்டுப் பாட்டு இத்தகைய நாடு தழுவிய பாடல்களுடன் வாழ்த்து வரி, அம்மானை வரி, கந்துக வரி, வள்ளை வரி, முரிவரி, திணை நிலை வரி இன்ன வரிப் பாடல்களும் தேவர்ப்பராய வாரப் பாடல்களுமாக ஏடு தழுவிய பாடல்களும் எத்துணை எத்துணை உள! கண்ணைக் காரெருமைத் தோல்போர்த்துக் கட்டிக் கொண்டு காட்சியெதுவும் இல்லை என்பார்க்குக் கருந்திரை கிழித்துக் காட்சி தரத் தனியொரு கதிரொளி வேண்டுமே! அது தமிழர் தன்னையுணர்ந்து மொழி அடிமைப்படா விடுதலை பெற்றாலன்றி வாராதே!

'எழுவகைத் தாளத்தில் இசை பிறக்கும் என்பதை முதற்கண் கண்டவர் தமிழர்' என்று, கருணாமிர்த சாகரம் கூறுவதையும், தமிழ்ப் பண்களிலிருந்தே இராகங்கள் தோன்றின என்று சங்கீத ரத்னாகரம் கூறுவதையும் குறிப்பிடுகிறார்.

திருப்புகழிலமைந்துள்ள தாள விரிவையும், கல்லாடத் துள்ள இசைக் கருவி வளத்தையும் சுட்டுகிறார்.

ஐந்திணைப் பாகுபாட்டால் நேர்ந்த இசைநலம், வல்லிசை மெல்லிசைக் கருவிப்பாகுபாடும் குறிக்கும் கா.சு. 'யாழே வீணையாக உருவெடுத்தது போலும்' என்கிறார்.