உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயம்

5. தமிழர் சமயம் (சிறப்பு)

“சமையம் என்பது சமைக்கப்பட்டது என்ற பொருளில் ஒரு தெய்வத்தை வழிபடுவதற்கு வகுக்கப்பட்ட நெறியினைக் குறிப்ப தாகும். சமையம் என்ற சொல் சமயம் என்று மருவிற்று" என்பது கா.சு. காட்டும் சமையப் பொருள் விளக்கம் (17).

அமையம் என்பதும் சமையம் என்பதும் ஒரு பொருளனவே. அமையம் முதல் வடிவம்; சமையம் அதன் வளர் வடிவம்.நன்று இது என்று அமைக்கப்பட்டதே அமைப்பு; அமைச்சு; அமையம் ன்னவெல்லாம்.

அமர் சமர் என்றும், ஏண் சேண் என்றும் உவணம் சுவணம் என்றும் ஆதல்போல, அமையம் சமையமெனச் சகர மெய் பெற்று நின்றதாம்.

சமையல்

சமையச் சொல்லின் பொருள் விளக்கம் 'சமைத்தல்' என்பதால் விளங்கும். சமைத்தல் என்பது பக்குவப் படுத்துதல். அப்படி அப்படியே மாந்தன் இலை, தழை, காய்கறி முதலியவற்றை உண்ட நாள் உண்டு. அதன்பின் அறிவு வளரவளரத் தீயைக் கண்டு அதனால் உணவுப் பொருள்களை வாட்டியும் வதக்கியும் பொரித்தும் பொங்கியும் உண்ணும் திறம் பெற்றான். அவ்வாறு உணவைப் பக்குவப்படுத்தும் கலையே சமையற் கலையாய்ப் பெயர் பெற்றது.

வன்பொருள்களை மென்பொருள்களாக்கவும், சுவையற்ற வற்றை சுவையுற்றவையாக்கவும் அச் சமையற்கலை உதவியது. கரடுமுரடாகவும் மேடு பள்ளமாகவும் கிடந்த நிலத்தைப் பண்படுத்தி விளைநிலைமாக்க அவன் அறிவு துணையாவது. சமைக்கவும், பண்படுத்தவும் உதவிய அவ்வறிவே, சமயத் தேர்ச்சியையும் அருளியது.