உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

இளங்குமரனார் தமிழ்வளம் -25

யேய்க்கும் உடுக்கை என வரும் குறுந்தொகைக் கடவுள் வாழ்த்து உவமைகள் நான்கும் தெளிவிக்கும். அதனை அடுத்த முதற்பாட்டில் செங்களம் படக்கொன்று என்றும், செங்காந்தள் என்றும் வருவனவும் விளக்கும். இச்சேய், முருகாற்றுப் படையில் மலை கிழவோன் எனப்பட்டது. அவன் வழிபாட்டுச் சிறப்புக்குரிமை பூண்டது மலைநிலம் என்பதைக் காட்டும்.

மலையின் இயற்கைச் செறிவும், ஆங்கு மலர்கள் பொதுளி நிற்றலும், ஆங்குள்ள மரம் செடி கொடிகளின் இயற்கை மணப் பெருக்காம் முருகு சிறத்தலும், வேல் கொண்டு வேட்டமாடலும், வெறியாட்டெடுத்தலும் ஆயவெல்லாம் முருகுப் பொருளாகிச்

சிறந்தன.

'சேய்' என்பது சிவந்தவன் என்னும் பொருள் தருவதோடு, 'மகன்' என்னும் பொருளும் தருதல் உண்மையால் தந்தையர் ஒப்பர்மக்கள் என்னும் கருத்தால் சிவனைத் தந்தையாகவும், அவன் சேயை முருகனாகவும் காணத் தூண்டிற்றாம். இருவர் நிறத்தையும் சிவப்பாகக் கொள்ளவும், இருவரையும் மலைநிலக் கடவுளராகக் கொள்ளவும் வைத்ததாம்.

இனி, முருகனுக்கு முன்னோனாகச் சொல்லப்பட்டு வரும் மூத்தபிள்ளையார் வழிபாட்டுக் குறிப்பு சிறுத்தொண்டரின் வாதாவிப் படையெடுப்பின் பின்னர் அவர் கொண்டு வந்த வெற்றிப் பொருள்களுள் ஒன்றாகித் தமிழகத்திற்கு வந்தது என்பது வரலாற்றாளர் குறிப்பு அவ்வழிபாட்டுக் குறிப்பும் சிறுத்தொண்டர் காலத்திற்குப் பிற்படவே கிளர்ந்ததாயிற்று.ஆயின், யானை முகர் வழிபாடு யானைகள் மிகுந்துள்ள நாட்டில் தான் தோன்றியிருக்க வேண்டும். தென்னிந்தியாவில் அல்லது மேலை இந்தியாவில் அது முதலில் தொடங்கினது போலும் என்றும், மலைகளிலேதான் அது தொடங்கக்கூடும், ஆதலினாலும், இயற்கை வழிபாடாகிய முருகன் வணக்கம் ஏற்படும் முன்னரே மனிதன் தன்னிலும் பெருவடிவமுடைய யானையை வழிபட்டிருத்தல் கூடுமா தலாலும் முருகன் குறிஞ்சி நிலத்தெய்வமாகக் கருதப்படுமுன் யானைமுகன் குறிஞ்சி நிலத் தெய்வமாக இருந்தனர்போலும் என்றும், முருகன் சிவகுமரனாகக் கருதப்பட்டபோது அவருக்கு முற்பட்ட யானைமுகத்தெய்வம் சிவனாரது மூத்தப்பிள்ளையாகப் பேசப்பட்டது என்றும் 'கா.சு.' குறிப்பார்.