உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

'முல்லை நிலத்தில் மாயோன் குழலூதும் மேய்ப்பனாக வழி படப்பட்ட போது கருநிறத்தன் என்ற பொருளுடைய கிருஷ்ணன் என்ற சொல் ஆரிய வழக்கில் வந்தது. கிருஷ்ணன் என்ற சொல் ஆரிய வழக்கில்வந்தது. கிருஷ்ணன் முல்லைநிலத்தின் தமிழ்த் தெய்வமென்றும், அவன் ஆரியத் தெய்வங்களுக்கு வேறானவன் என்றும் காலஞ் சென்ற பி. தி. சீனிவாச ஐயங்கார் ஆய்ந்து கூறினார். ஆணைச் சிறப்பாகக் கூறும் மரபு பற்றி விஷ்ணுவைத் தமையனாகவும் சிவசக்தியைத் தங்கையாகவும் கூறும் வழக்கம் ஏற்பட்டது போலும்" என்கிறார் கா.சு.

தொல்காப்பிய முறையில் ஆய்ந்தால் முல்லைநிலத் தெய்வமாகமாயோன் சுட்டப்படுவன். "மாயோன் மேய காடுறை யுலகம்" என்பது அது.

து

'மாயோன்' 'மால்' என்பவை, கரியன் என்னும் பொருளன. செம்மை சேய் எனப்பட்டது போல் கருமை 'மா' நிறமாகக் கொள்ளப்பட்டது. மாயன் கண்ணன் என்பனவும் அப்பொருள் குறித்தனவே. இவ்விடத்தே மாரி, காளி என்னும் தாய்வழிபாட்டை எண்ணுதல் தகும்.

மாரி என்பது மழை; மழை முகில் நிறம் கருமையானதே. அது 'காளமுகில்' கருமுகில் எனவும் படும். மழை பெய்யும் நிலையில் மாரியாம்! கருமுகில் நிலையில் காளியாம்! ஆகவே காளி மாரி வழிபாடுகள் மழை வழிபாடு எனலாம். வான்சிறப்பு எனவும் கூறலாம். இன்றும் மழை பெய்வான் வேண்டி மாரி வழிபாடு நிகழ்த்துதல் கண்கூடாம்.

செங்கதிர் வழிபாடு சிவ வழிபாடாய் அமைந்தது போல், கருமுகில் வழிபாடு காளி வழிபாடாய்,திருமால் வழிபாடாய் விளங்கலாயிற்று எனலாம். மாயோன் என்பது ஆண்பால்! மாயோள் பெண்பால்! மாயோன் வழிபாடு முற்பட்ட சான்றுடையது. மாயோள் வழிபாடு பிற்பட்டது. அன்றியும் மழை பெய்தலறியாது பொய்த்துப் போம். வறண்ட பாலை நிலத் தெய்வ வழிபாடாகப் பின்னூல்களில் வழங்கிற்று. இவை ஆயத்தக்கவை.

தாய் வழிபாடாம் 'சத்தி' வழிபாடு, மாலிய வழிபாடாக வழங்கியதையும் 'கா.சு.' ஆய்கிறார்.

அச்ச வடிவாகவோ அன்பு வடிவாகவோ உள்ள அம்மன் கோயில் இல்லாத பண்டைச் சிற்றூர் தமிழ்நாட்டில் இல்லை.