உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

எண்குணம்

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

இறைவன் குணங்கள் எட்டெனக் கூறுவது பெருவழக் காயிற்று. திருக்குறள் கடவுள் வாழ்த்தில் வரும் எண்குணத்தான் என்பதை விளக்கும் பரிமேலழகர், "எண்குணங்களாவன: தன் வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவில் ஆற்றலுடைமை, வரம்பிலின்ப முடைமை என இவை” என்பார்.

இப்பொருளைக் கருதும் கா.சு. திருக்குறள் கடவுள் வாழ்த்து வான்சிறப்பு இரண்டையும் ஆய்ந்து புதுவிளக்கம் தருகிறார்.

(திருவள்ளுவர்) "கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் முதல் எட்டுக் குறள்களில் இறைவனின் எண்குணங்களையும் முறையே கூறி ஒன்பதாவது குறளில் எண்குணங்களையும் தொகுத்துச் சுட்டிப் பத்தாவது குறளில் இறை வணக்கத்தின் இன்றியமை யாமையைப் பயன்கூறு முகத்தால் வற்புறுத்தினர். வான்சிறப்பு என்ற இரண்டாவது அதிகாரத்தில் கடவுள் திருவருளினால் நடைபெறும் முத்தொழில் அல்லது ஐந்தொழிலை மழையின் வைத்துக் கூறிப்போந்தனர். இறைவனை அருவுருவ வடிவிலோ உருவ வடிவிலோ வழிபடலாம் என்பது குறிப்பிப்பார். கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ஏழு திருக்குறளில் அடி அல்லது தாள் என்ற சொல்லை வழங்கினார்.

இவ்விளக்கம் புதுமையானதே, எண்ணுவார் எண்ணும் குணங்களையுடையான் என எண்குணத்தான் என்பதற்கு வ.உசி. யும் திரு.வி.க. வும் உரை யெழுதுவர். எல்லார் உரையிலும்

வ்வெண்குணத்தான் பாடல் ஒன்பதாக அமைந்திராமையால் எட்டுக் குறள்களில் கூறப்பட்ட குணம் எனல் சாலாது எனத் திருக்குறள் உரைவேற்றுமையார் குறிப்பர்.'வான்சிறப்பு' இறையருள் என்னும் கருத்திலோ, அடி என்பது உருவ வழி பாட்டுக் கருத்துடையது என்பதிலோ ஐயுறவில்லை. ஆனால், எண்குணத்தான் என்பதற்கு முற்படு குறள்களைக் கூட்டிக் காணும் மரபுக்கு வள்ளுவச் சான்றும் காணல் அரிது. ஆயின், கா.சு. புது நோக்கு போற்றுதற்குரிமை பூண்டதாம்.

வைதிகமும் தமிழர் சமயமும்

வைதிகச் சமயக் கொள்கையும், தமிழர் சமயக் கொள்கையும் வேறுபடுமாற்றைக் 'கா.சு.' காண்கிறார். அக்காட்சியின் குறிப்பும் மறுப்பும் அவர் மொழியாலேயே காட்டப்பெறுகின்றன.