உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

‘மெய்யோ டியையினும் உயிரியல் திரியா' என்னுஞ் சூத்திரம் எழுந்ததாகும்.

ஆய்தம்

ஆய்தம் என்பது நுட்பமானது என்னும் பொருள்படும். எல்லா எழுத்தும் தோன்றுவதற்குக் காரணமான மூச்சொலியையே ஆய்தம் என்றார். அது தானே எழுத்தாகாது எழுத்துக்கள் தோன்று தற்குக் காரணமாய் இருத்தலின் அதனைத் தனிப் பொருளாகிய கடவுளுக்கு ஒப்பிடுவார் தனிநிலை என்றார்.

மெய்யானது சட உலகின் பகுதியாய் அதன் இயல்புடைய தாய் இருத்தலின் அது ஒரு சிற்றுலகமாகும். உயிரெழுத்தானது உயிரைக் குறிக்கும். ஆய்த எழுத்தானது கடவுளைக் குறிக்கும். எனவே கடவுள், உயிர், உலகம் என்ற மூன்றுக்கும் குறிப்புச் சொற்கள் ஆதி இலக்கண நூலில் அமைந்திருத்தல் ஓர்க.

பெயர் விளக்கம்

உயிர் என்பதன் மூலம் 'உய்' என்பது. இர் என்பது ஈறு. உய்ப்பது யாது,அஃது உயிர் என்க. உய்ப்பது என்பது செலுத்துவது, கடைத்தேற்றம் தருவது என்னும் பொருட்டது. உயிரின் இயல் புணர்ந்து அத்தன்மையுடைய எழுத்துக்குப் பெயராக வைத்தமை கொண்டு, எழுத்துகளைப் படைத்துக் கொள்ளுமுன்னரேயே அவற்றுக்குக் குறியீடு வைத்துக் கொள்ளுமுன்னரேயே தமிழறிவர் கொண்டிருந்த மெய்க்கலைத் தேர்ச்சி இத்தகைத்தென விளங்கச் செய்வதாம்.

'மெய்' யெழுத்து உடல் என்றும் வழங்கும். உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்பதில் உடல் மெய்யெழுத் தாதல் அறிக. பொய்யாய் அழிவது என்றன்றோ உடலைப் பிற்காலப் போலிமைத் துறவர் இழித்தும் பழித்தும் ஒதுக்கினர்! அதனை மெய்யென்றது என்னை?

மெய்ப்பொருள்

உலகத்தில் நிலையாமை பேசப்படுவதேன்? நிலையாமையை மெய்யாக ஒருவன் உணர்ந்து கொண்டால் என்ன செய்ய முந்துவன்? உடலில் உயிர் இருக்கும்போதே அவ்வுடலின் நிலையாமையை எண்ணி உடனே செய்தக்கவற்றைச் செய்தலில் தலைப்படுதல் வேண்டும் என்பதேயாம்.