உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

அவை தன்னுள் இயங்குவதற்கு இடந்தந்துதான் அவற்றினுள்ளு மாய்ப் புலப்படாது நிற்பன என்க.

ஆகாரம்

சிறிது தோன்றியும் தோன்றாமலும் உள்ள இறைவனியல்பை அகரவொலி காட்டா நிற்ப, உலகுயிர்களை இயக்கி அவ்வியக்கத் தால் தன்னிலையைப் புலப்படுத்தி ஐந்தொழிலியற்றும் முதல் வனியல்பை ஆகார ஒலி குறிப்பிடா நிற்கும் என்க.

இகரம்

உலகுயிர்களெல்லாம் நிறைந்த இறைவன் போல வாயிட மெல்லாம் நிரம்பிய ஓசையாய் ஒலிக்கும் அகர ஆகாரங்கள் போலாது.இ என்னும் ஒலி, வாயின் ஓர் உறுப்பாகிய நாவின் தொழிலால் பிறத்தலின் இதுசிறிது இயக்கமுடைய சிற்றறிவுயிர் களை உணர்த்தும் ஓசையாம். இதன் நீட்டமாகிய ஈகார ஒலி பிறவி வட்டத்திற் செல்லும் சிற்றுயிர்களை உணர்த்துவதாம்.

உகரம்

இதழ்களைக் குவித்துக் கூறும் முயற்சியாற் சிறிது இயங்கும் உகர ஒலி பிறவி ஓய்ந்து போக, இறைவன் திருவடியை நோக்கி மெல்லச் செல்லும் தூய உயிர்க்கு அடையாளமாகும். உகரத்தின் நீட்டமாகிய ஊகார ஒலி முதல்வனடியை நோக்கி முறுகிச் செல்லும் தூய உயிரை உணர்த்தா நிற்கும்.

அ, இ

அ உ என்னும் மூன்றொலிகளில் அகரம் முற்றோன்று தலின் அது தோற்றத்தினையும் இகரம் தோன்றிய ஒலி சிறிது நேரம்நிற்கப் பெறுவதாகலின் அது நிலையினையும், உகரம் அவ்வொலி முடியுமிடமாய் இருத்தலின் இறுதியினையும் உணர்த்துகின்றன. உணர்த்தவே பொருளுலகத்தின் நிகழும் தோற்றம் நிலை இறுதி என்னும் முத்தொழில்களும் ஒலியுலக மாகிய அகர இகர உகரங்களில் அறியக் கிடக்கும் என்பது பெற்றாம்.

இவ்வாறே பிற உயிர், மெய், ஆய்தம், உயிர்மெய் என்பவற்றை யெல்லாம் மெய்ப்பொருள் விளக்கப் பொருளாகக் காட்டுகிறார் அடிகளார். மறைமலையடிகளார் அறிவுரைக் கோவை, சிவஞான போத ஆராய்ச்சி என்னும் நூல்களில் கண்டு கொள்க.