உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

என்பதாலும், உயிர் ஒரு தலைவனையுடைமை பற்றுக பற்றற்றான் பற்றினை என்பதாலும் (350) உயிர்க்குப் பிறப்பு இறப்பு வீடுபேறு உள்ளன என்பது "புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு" (340) என்பதாலும், துன்பம் மிகமிக உடல்மேல் பற்றுதல் மிகவுண்டாம் என்பது இழத்தொறும் காதலிக்கும் சூதேபோல் (940) என்பதாலும், உயிர்க்குக் கட்டு உளது என்பது இருள்சேர் இருவினை (5) என்பதாலும், உயிர்க்கு மயக்குணர்வு உண்டு என்பது மருளானாம் (351) புல்லறிவு (331) என்பவற்றாலும், உயிர் சார்ந்ததன் வண்ணமாதலுடையது என்பது நிலத்தியல்பால் நீர் திரிந்தற்று (452) என்பதாலும் விளக்கப்படுதலை நயமாகக் குறிக்கிறார்.

திருக்குறளை ஊடகமாகக் கொண்டு அறமன்று, பொருளன்று, இன்பன்று பிறபிறவன்று, மனவியல் உயிரியல் ஆகிய அறிவியல் கலை நுணுக்கங்களையும் தெளிவுறக் கண்டு தேர்ச்சி கொள்ளக் கூடும் என்பதைத் தம் நிறைபெறும் துறை நலம் வாய்ந்த கூர்ப்பால் கண்டு கண்டுரைக்கிறார் கா.சு.

மெய்யியல் வைப்பகமாகத் தொல்காப்பியர் திருவள்ளுவர் மெய்கண்டார் என்பவற்றைத்தெளிந்த கா.சு. அவற்றின் நிலைக் களங்களைத் தெரிந்து நேரிதின் வைக்கிறார்:

முனைவன்

“வினையின் நீங்கி விளங்கிய அறிவின்

முனைவன் கண்டது முதல்நூல் ஆகும்”

என்னும் தொல்காப்பிய நூற்பாவைக் கருதும் கா.சு."இறைவனுக்கு இயல்பாகவே வினையில்லாமையால் அவன் பிறப்பு இறப்பு இல்லாதவன் என்பதும், இயற்கை அறிவும் முற்றறிவும் உடையவன் என்பதும், வினையும் சிற்றறிவுமுடைய உயிர்க்கு உண்மை உணர்த்தக் கூடியவன் அவனே என்பதும் கூறியவாறாகும். இறைவன் அருளால் முதல் நூல் தோன்றும் என்ற கொள்கை தமிழர்க் குள்ளே தான் முதலில் எழுந்ததாகும். அது பின்னர் ஆரியத்தில் தழுவப்பட்டது எனத் தெளிவிக்கிறார்.

கடவுளையும் திருவருளையும் கிழவனும் கிழத்தியுமாகக் கூறும் வழக்கு தொல்காப்பியர்க்கும் முற்பட்டது என்றும், அம்முறையைத் தழுவியே தேவாரம், திருவாய் மொழி அமைந்தன என்றும், இக்கருத்தை அறியாதார் இம்முறை காணப்படாத