உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு

77

வடவேதத்தின் சாரம் தமிழ் வேதம் என்று பிழைபடப் பேசுவர் என்றும் மயக்கறுக்கிறார்.

இனித் திருக்குறள் கடவுள் வாழ்த்தில் முழுமுதற் கடவுள் இலக்கணம் நமக்கு வேண்டிய அளவு விளக்கப்பட்டுள்ளது என்பதை நிறுவுகிறார்:

திருவள்ளுவப் பயன்

கல்வியறிவினால் முற்றறிவுடைய முதல்வனை அறிந்து அவனைத் தொழுது பிறவித் துன்பத்தை ஒழித்து வீடெய்துதலே நம்முடைய முடிவான நோக்கமாய் இருத்தற்குரியது. இறைவனது அறிவாற்றலையும் செயலாற்றலையும் இடை விடாது நினைந்தால் நாம் உயர் நிலையடைவோம். இறைவன் இயல்பாகவே குற்ற மற்றவன். அவன் தனக்கென ஒன்றை விரும்புவதும் இல்லை; வெறுப்பதும் இல்லை. அவனை அன்போடு நாம் பற்றினால் பிறவித் துன்பத்துக்குக் காரணமாகிய உலகப் பற்று நம்மைவிட்டு அகலும். இவ்வுலகிலேயே பேரின்ப வாழ்வு பெறலாம்.

எல்லா அருஞ்செயல்களும் இறைவன் திருவருளால் நிகழ்வதால் உண்மைப் புகழ் இறைவனுக்கே உரியது. இறைவன் புகழை இடைவிடாது பேசுவார்பால் அறியாமை யால் வருகின்ற பயன் கருதிய நல்வினை தீவினைத் தொடர்புகள் சேரமாட்டா.

ஐம்பொறி அடக்கம் உயிரின் உயர்நிலைக்கு இன்றியமை யாதது என்றும் நிலைத்த பேரின்பத்தை நமக்குக் கொடுப்பதில் இணையற்ற பெருமானிடம் அன்பு செலுத்தினால் அல்லாமல் மனக்கலைவை ஒழிக்க முடியாது.

இறைவன் பலப்பல பிறவிக் கடல்களினின்றும் நம்மை எடுக்க வல்லான். ஏனெனில் அவன் பிறப்பு இறப்பு இல்லான்! இவை திருவள்ளுவப் பயன்.

மெய்கண்ட நூல்

கடவுள் உயிரோடும் உலகத்தோடும் ஒன்றாயும் வேறாயும் உடனாயும் நிற்கும் நிலையும், உயிரானது தன்னறிவால் அறிய இயலாது இறையறிவு கொண்டே அவனை அறியும் நிலையும், அழியும் பொருள் அழியாப் பொருள்முன் நில்லாத் தன்மையும், உயிர் கடவுட் பேரின்பத்தை நுகரும் முறையும் மெய்கண்ட நூலிற் காண்பது போலப் பிற எந்நூலினும் காண்டல் அரிது என முத்திரை பதிக்கிறார் கா.சு.