உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

நெக்கு நெக்குருகவும் -கருங்கல் மனமும் கரையவும் பாடிய பண்ணாரும் பாடல்கள் திருக்கோயிலில் இறைவன் திருமுன்னேயே நின்று பாடிய தீந்தமிழ்ப் பாடல்கள், கோயிலில் பூசனைப் பாடலாகக் கூடாதாம்; அப்படிப் பாடின் கோயிலிலே தீட்டுப் பட்டு விடுமாம்; இக்கொடுமை - கயக்கொடுமை இக் கேடு கெட்ட தமிழ் மண்ணுக்கு அன்றிப் பிறிதொரு மண்ணுக்கு உண்டாமோ?

-

சாதி அடிமை தந்த மொழியடிமை யன்றோ இது? இல்லாக் கால் தமிழ் மண்ணில் - தமிழர் உழைப்பில் தமிழர் வளத்தில் - தமிழர் கலையில் உருவாகிய திருக்கோயில் வழிபாடு தமிழாக இல்லாமல் ஒழியுமோ? சமயம் எக்கேடு கெட்டால் என்ன? சாதிமை காக்கப்பட வேண்டும். அவ்வளவே!

இனி, தமிழ்நாட்டு இசையின் நிலைமை என்ன?

சடங்கு மொழி

கோயில் மொழி வடமொழி என்றால் திருமணச் சடங்கு எம் மொழியில் நடத்தப்பட்டது? இறுதிக் கடன் எம்மொழியில் நடத்தப்பட்டது? நன்னிகழ்வா அன்னிகழ்வா எல்லாம் எல்லாம் சமயச் சார்புண்டானால் வட மொழிக்கே வாய் திறந்து வைக்கப் பட்டது! குடும்பச் சடங்கும் சொந்த மொழியில் நடத்தமாட்டா மூங்கையராக மூத்த தமிழ் மக்கள் முடங்கிக் கிடந்தனர். பொருளறி வாரா 'வேதமொழி கேட்டு ஆட்ட ஆடும் ஆடிப் பாவை போலக் கரணங்களை நடத்தும் கடமை வீரராகத் திகழ்வதே பிறவிப் பயன் எனக் கொண்டு விட்டனர். இன்றளவும் பெரிய மாற்றம் ஏற்பட்டு விட்ட தெனக் கூற முடியவில்லை.

மறைமலையார் எழுதியென்ன, கா.சு. எழுதியென்ன, பெரியார் பேசியென்ன, அண்ணா முழங்கி யென்ன, பாவேந்தர் பாடியென்ன,திரு.வி.க. பொழிந்தென்ன, பிறர் பிறர் முயன்றென்ன? பழைய கதை பழைய கதையே!

இசை

இசை மேடை என்றால் தெலுங்கே! இப்பொழுது இந்தியும்! தமிழ்ப்பாட்டு, மேடையில் ‘துக்கடா' என்னும் துணுக்கு அளவை விட்டுப் பெருகியதில்லை. தமிழிசைக் கல்லூரியாரே தமிழிசை என ஒன்றில்லை என்னும் பேறமைந்த நாட்டில் தமிழிசை பற்றிப் பேச வேண்டுமா?