உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. மெய்கண்ட தொண்டர்

திருவரங்கனாரால் கூட்டப்பெற்ற மாநாடுகள்

பல,

அவற்றில் தனிச் சிறப்புடையது ‘மெய்கண்ட சாத்திர மாநாடு’ ஆகும். அம் மாநாடு 21-5-41 முதல் 27-5-'41 முடிய ஏழு நாள்கள் திருநெல்வேலியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது :

"மெய்கண்ட சாத்திர மாநாடு, திருநெல்வேலி.

தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைச் சார்ந்த தென்னிந்திய சைவ சித்தாந்த சங்க ஆதரவில், வருகிற வேனிற் கால விடுமுறையில் அதாவது சித்திரைத் திங்கள் 29ஆம் நாள் முதல் 5 நாள்கள் இம் மாநாட்டைத் திருநெல்வேலியில் நடத்தத் திருவருளை முன்னிட்டுத் தீர்மானித்திருக்கிறோம்.

மெய்கண்ட நூல்கள் பதினான்கையும் ஆராய்ந்து அவ்வா ராய்ச்சிக் குறிப்புகளைச் சொற்பொழிவுக் கட்டுரைகளாகத் தொகுத்து அச்சிட்டு விழாக் காலத்திலேயே வெளியிடக் கருதியுள்ளோம். கட்டுரைகள் வெறும் ஆராய்ச்சிக்காகவே இருக்குமானால் சித்தாந்த நூலுணர்ச்சி பெற விரும்பும் எல்லா மக்களும் படித்து உண்மை காண முடியாதிருக்கும். ஆதலால், மேற்குறித்த நூல்களின் பொருள்களைச் சொற்பொழிவு வடிவாகவே எழுதியளிக்க வேண்டும் என்று சொற்பொழிவு செய்யும் பெரியோர்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

மேல் மேல் நடைமுறைகளைப்பற்றிய குறிப்புகள் பின்னர் வெளிவரும்.

வேண்டுகோள்

மக்களுக்கு மக்கட் பண்புகளை அளித்து உலகியலை இனிமையாக நடைபெறச்செய்து இருமைப் பயன்களையும் ஒருங்கே உதவுவது சமய உண்மைகளேயாகும். ஆதலால், இம் மாநாடு சிறப்பாகவும் பயன் பெறவும் நடைபெறுவதற்கு நாடு முழுமையும் தக்கவாறு கலந்துகொள்ள வேண்டும் என்று விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம்.