உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

111

நீலாம்பிகையார் நிலைமை என்ன? நீலாம்பிகை தம் காதல் தலைவருக்காக ஒன்பதாண்டுகள் தம் கன்னிமைப் பருவத்திலேயே கடுந்தவம் மேற்கொண்ட தவம் செய்த தவமாம் தையலர் ஆயினரே! அப் பிரிவைத் தாங்கித் தாங்கி உருகும் உள்ளத்தை உருக்காக்கிக் கொண்ட கடும் நோன்பினர் ஆயினரே! அவர்க்கு அரங்கர் பிரிவைத் தாங்கும் ஆற்றல் இருக்கத்தானே வேண்டும்! குழந்தையரை நினைத்தேனும் கொழுநர் பிரிவைத் தாங்கித் தானே ஆக வேண்டும்! இறைவன் செய்யும் கூத்துக்குத் தகக் கொண்டு ஒழுகத்தானே வேண்டும்! ஆம்! வேண்டுவது தான். ஆனால், அப் பிரிவு கல்லைக் கனியாக்கிக்கொள்ள வாய்த்த காதல் பிரிவு! இப் பிரிவு, அத்தகைத்தோ? கைம்மைப் பிரிவன்றோ! "என்றேனும் காதல் அரங்கரைக் காண ஒண்ணும்; கைப்பிடிக்க ஒண்ணும்; கலந்து களிப்புற ஒண்ணும்" என்னும் திடந்தந்த திண்மைப் பிரிவு அது! இஃது, அந்தோ பெரும் பிரிவு ஆயிற்றே! அவர் திருமுகத்தைக் காணக் கூடுமோ, காலமெல்லாம் காத்திருந்தாலும்! அவர் திருச் சொல்லைக் கேட்கவும் கூடுமோ ஆண்டாண்டாகக் செவியைத் தீட்டிக் கூராக்கிக் கொண்டிருந் தாலும்! நெஞ்சில் உறைந்த காதலர் நெகிழப் போய்விட்டாரே நெடுந்தொலைவுக்கு! என்றும் மீண்டுவாரா நெடுந்தொலைவுக்கு! நெக்குருகி இனிச் செய்ய என்ன ஆகும்! ‘அவர் ஆருயிர் அம்பலவன் அடி நிழலில் ஆறுதல் பெறுக' என்று வேண்டுவது ஒன்றுதானே! அம்மையார் அதனைச் செய்தார்! குழந்தைகளை நோக்கிக் குற்றுயிர் தாங்கினார். ஆனால் அவர்க்கு உயிர் மூச்சாக இருந்த அன்னைத் தமிழ்ப்பணியில் தோய்ந்து அமிழ்த முண்ணும் பேற்றையும் அரங்கர் பிரிவு வாரிச் சுருட்டிக் கொண்டு போய்விட்டதே!

அந்தோ! அம்மையை

வாழவைத்துக்கொண்டிருந்த வண்டமிழ் மருந்தை, மாந்தி மாந்தி மனநோயை மாற்றிக் கொள்ளுதற்காம் வாய்ப்பையும் அன்றோ அரங்கப் பெருமான் கூடவே அள்ளிக்கொண்டு போய்விட்டார்! அவரா அள்ளிக் கொண்டு போனார்? தாம் தொண்டு செய்யாது விடுத்த அரை குறையையும் தவமகள் நீலா செய்வார் என்று திண்ணமுற எண்ணியிருந்த அண்ணல் அரங்கரோ அவ் வன்மையைப் புரிவார்! அவர் பிரிவு அம்மையை அப்படி உலுக்கிவிட்டது! உலைத்துவிட்டது! ஒடுக்கிவிட்டது! ஓடாய்த் தேய்த்துவிட்டது!

அரங்கரோடு வாழ்ந்த நாளிலும் அம்மையார் நோயின்றி வாழ்ந்தாரோ? ஆனால், அரங்கர் இருந்தார்! ஆளன் இருந்தார்!