உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

113

நூல்களை யாத்தார். ஆக, அம்மையார் தமிழ் கூறு நல்லுலகுக்குத் தந்த தமிழ்க் கொடை பதின்மூன்று நூல்களும், தனித் தமிழ் இயக்கமுமாகும். அந் நூல்கள், (1) தனித் தமிழ்க் கட்டுரைகள், (2) முப் பெண்மணிகள் வரலாறு, (3) எலிசபெத்பிரை பெருமாட்டி, (4) தமிழ்நாடும் தமிழ்மொழியும் முன்னேறுவது எப்படி?, (5) ஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் ஆங்கிலப் பழமொழிகளும், (6) வடசொற்றமிழ் அகரவரிசை, (7) ஜோன் வரலாறு, (8) பிளாரென்ஸ் நைட்டிங்கேல், (9) அருஞ்செயன் மூவர், (10) மேனாட்டுப் பெண்மணிகள் (முதற் பகுதி), (11) மேனாட்டுப் பெண்மணிகள் (இரண்டாம் பகுதி), (12) பழந்தமிழ் மாதர், (13) நால்வர் வரலாறு என்பன.

அம்மையாரின் பின்வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுகிறார் அவர்தம் அருமை இளவல் மறை திருநாவுக்கரசர்:

"தம் ஆருயிர்க் கணவரின் பிரிவுக்குப்பின் அம்மையார், உயிர் போன உடலென வாழ்ந்தார். தம் அருமை மக்களுக்காகவே உயிர் தாங்கியிருப்பதாகச் சொல்வார். எனினும், அழுந்திய சிவ பக்தியின் மாண்பினாலும், கற்ற கல்வி கேள்விகளினாலும் இயல்பாயமைந்த நற்பண்புகளினாலும் அம்மையார் ஒருவாறு தேறி அமைதியுடன் வாழ்ந்தார். ஒற்றை வெண்புடைவையும் நெற்றி நிறைந்த நீறும் இயல்பான செம்மை நலமுமே அவர்க்கு அணிகலன்களாகத் திகழ்ந்தன. அம்மையாரின் இந்த அருமைக் கோலம் திலகவதியம்மையின் சைவத் தெய்வத் திருக்கோலத்தை நினைப்பூட்டிக் கொண்டே இருக்கும்.

66

திருவரங்கனார் பிரிவுக்குப் பிறகு அம்மையார் குடும்பத்தைத் தாய்போற் பேரன்பினராய்ப் பேணிக் காத்தவர் திரு. வ. சுப்பையா பிள்ளையவர்களாவர். இவர் திருவரங் கனாரின் தம்பி. அண்ணனாரிடத்துப் பேரன்பு வாய்ந்தவர். அதைவிட அண்ணியாரிடத்துப் பேரன்பு கொண்டவர். கழகம் தோன்றிய நாள்முதல் அண்ணனாருடனிருந்து சிவத் தொண்டு தமிழ்த் தொண்டுகளாற்றி வருகின்றனர். இவர்தம் அன்பார்ந்த பாதுகாப்பும், அரங்கனாரின் தொண்டினைப் பெரிதும் போற்றிய வகையில் வாழ்க்கைக்குப் போதிய வருவாய் இல்லாத அக் குடும்பத்தினருக்குத் திங்கள்தோறும் கழகப் பணத்திலிருந்து கடமைப் பொருள் கொடுத்துதவும் கழகத்தாரின் அரிய உதவியும் அம்மையாரின் குடும்பக் கவலையைப் பெரிதளவு குறைத்துவிட்டன.