உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. “திறவோர் காட்சி”

வட கடலில் ஒரு நுகக்கோல் இடப்பெற்றது. தென் கடலில் ஒரு கடையாணி இடப்பெற்றது. இரண்டும் நகர்ந்தன; நகர்ந்து நகர்ந்து, அலைந்து அலைந்து நெருங்கின; ஓரிடத்திலே, வடகடலில் கிடந்த நுகக் கோலின் ஒரு துளையில், தென் கடலில் கிடந்த கடையாணி செவ்வையாகப் பொருந்திக்கொண்டது! இஃது எத்தகையது?

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த ஒருவனும், எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த ஒருத்தியும், எங்கோ ஓரிடத்துக் கண்டு ஒருவரை ஒருவர் விட்டுப் பிரியா விருப்பில் கூடி வாழ்வது போன்றது என்பது அகப்பொருள் கட்டுரை. “வட கடலிட்ட ஒரு நுகம் ஒரு துளை, தென் கடலிட்ட ஒரு கழி சென்று கோத்தாற் போல' என்கிறது அது! (இறையனார் அகப்பொருள் 2. உரை.)

இவ் வரலாற்று நாயகர், பாளைத் திருவரங்கர்க்கும், நாகை (நாகப்பட்டினம்) மறைமலையடிகளுக்கும் அணுக்கத் தொடர்பு எவ்வாறு உண்டாயது?

ஒருவருக்கொருவர் தொடர்பு எப்படி யுண்டாம்? அடிக்கடி பார்த்து உறவாடும் உரிமையன்பு தலைப்பட்டார்க்கே தொடர்பு உண்டாதல் உலகியல்! ஆனால் அடிகளும் அரங்கரும் ஓரூரா? ஓரிடத்தாரா? ஒரு குடும்பத்துப் பிறந்த நெருக்கத்தாரா? உறவு முறையாரா? இல்லை! இல்லை!

இனி, அடிகள் ஆசிரியராய், அரங்கர் மாணவராய்ப் பயின்று பழகும் வாய்ப்பு ஏற்பட்டதா? உடன் வேலையாளியாய் ஒன்றி உறையும் நிலைமை இருந்ததா? அடிகளார்க்கும் அரங்கர்க்கும் வணிகத் தொடர்பு நேர்ந்து கலப்பாயிற்றா? அடிகளார் வணிக நிறுவனராகவோ, அரங்கர்க்குத் தொழில் தந்த தலைவராகவோ இருந்தாரா? இல்லை! இல்லை!

அடிகளார்க்குத், தமிழ் தொடர்பாக அன்புடையார் பலர் இருந்தனர்; சமயம் தொடர்பாக ஈடுபாட்டாளர் பலர் இருந்தனர்; இவ்விரண்டன் பேராலும் அமைப்புகள் ஏற்படுத்திப்